பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அகநானூறு - களிற்றியானை நிரை


மரத்தினிடத்தே, வளைந்த தொடையினையுடைய இளங்கன்றுடன் கட்டப்பெற்ற, அடிக்கடி தன் கன்றைப் பார்த்திருக்கும் தலையீற்றுப் பசுவைப்போல, அவளுடைய முதுகைப் பார்த்தேன். அவள் அருகே சென்று, வளைந்த அவள் நெற்றியைத் தடவினேன். மெல்லென அவளை அப்படியே தழுவியுங் கொண்டேன். என் மகளும், தன் மார்பகத்து முலைகளினிடையிலே வியர்வு உண்டாகுமாறு, பலமுறை என்னை நன்றாகத் தழுவிக் கொண்டனள் அந்தோ! அஃதெல்லாம் இப்போது போயிற்றே!

வானமானது வறண்டுபோக, அதனால் வருந்தித் தளர்வுற்ற இளமானின் கூட்டமானது, வற்றிய மரற்செடியினைச் சுவைக்கின்ற தன்மையுடையது காடு. அவ்விடத்தே, வலி மிகுந்த பெருந் தகையாகிய அவள் காதலன், இவளைப் பலபடியாகப் பாராட்டி, வறண்ட நிழலிலே தங்கித் தங்கி உடன்கொண்டு போதலையான் முன்பே அறியாமற் போனேனே! அறிந்தேனாயின்,

இவளுடைய தந்தையது, தங்கும் உணவு மிகுந்துள்ள காவல் பொருந்திய பெருமனையிலே, இவள் செல்லுமிடந்தோறும் செல்லுமிடந்தோறும், இவள் உடலின் நிழலைப் போலத் தொடர்ந்து செல்வேனே! கோதையை உடைய ஆயத்தோடு விளையாட்டினை மேற்கொண்டு, தொகுதி வாய்ந்த பரலினை உடைய சிலம்புகள் ஒலிக்க, இவள் ஆடுந்தோறும் ஆடுந்தோறும், யானும் இவளைவிட்டுப் பிரியாமலேயே இவளுடன்தானே இருந்திருப்பேனே!

சொற்பொருள்: 1. வெய்யோள் - விரும்புகின்ற இயல்பினள். 3. முன்னாட் போலாமை - அவனோடு கூடிய களவு ஒழுக்கத்தினால் வேறுபட்டமை. 4. கொடுந்தொடை - வளைந்தகால். 5. கடுங்கட் கறவை - தலையீற்றுப்பசுவும், ஈன்ற அணிமையுடைய நிலையினை உடையதும் ஆம் 8. இடைமுலை - முலையிடை நெஞ்சு. பல்கான் முயங்கினாள் பிரியப்போவதை நினைந்து அதனை அறியாது போயினனே என்க. 10. பாராட்டி - கொண்டாடி. 14. பதம் சோறு. மரற்செடி - ஒருவகைக் கள்ளிச்செடி. 14. கடி - காவல்.

விளக்கம்: 'உண்ண உணவும், குடிக்க நீரும், தங்க நிழலும் அற்ற காட்டு வழியிலே, எம்மை எல்லாம் வெறுத்து அவள் போயினளே!’ என்று செவிலித்தாய் ஏங்குகிறாள். வளர்த்த பாசம் அவளுக்கு பிரியாராய் உடனுறையும் தோழியருக்கு ‘மெய்ந்நிழல் போல’ என்னும் உவமை மிக்கபொருத்தம் உடையதாகும். செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் பிரியாதே தொடருமாறுபோல, அவரும் அவனைப் பிரியாது உடனிருப்பவராவர் என்று கொள்க.