பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 101


உதவுவதே மாண்புடைமையாகும். இங்ங்ணம் தன் நெஞ்சிற்குச் சொல்லி அமைகின்றான் ஒரு தலைவன்)

ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற,
நீள்ளி பரந்த நெடுந்தாள் யாத்து,
போழ்வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி,

ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி .
5


எருவைச் சேவல் கரிபுசிறை தீய,
வேனில் நீடிய வேய்உயர் நனந்தலை,
நீஉழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி
பல்இதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்

பிரியின் புணர்வது ஆயிற், பிரியாது.
10


ஏந்துமுலை முற்றம் வீங்கப், பல்வீழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை - மாண் நெஞ்சம் - நீங்குதன் மறந்தே.

ஆட்கள் போக்குவரவு அற்ற சுரத்தினிடையிலே, ஞாயிற்றின் கதிர்கள் காய்தலினால் மிகுதியான வெம்மை பரவிற்று. நீண்ட அடிமரத்தையுடைய யாமரத்தின் அழகற்ற வாடிய உயர்ந்த கிளையிலே, ஊடறுத்துச் செல்லுகின்ற காற்றும் இரைச்சலிடும். அதன்கண், புலாலினை விரும்பி இருக்கின்ற தன் பெடையின் முகத்தினைப் பார்த்த, ஊன்துண்டினைப் பதித்து வைத்தாற்போன்ற அச்சந்தரும் சிவப்பான காதுகளையுடைய எருவைச் சேவலின் சிறை கரிந்து தீய்ந்துபோம். வேனிலானது அவ்வளவு மிகுந்திருக்கும், மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும், அகன்ற காடு அது.

நீ, அதனிடையே சென்று வருந்திச் செய்யும் வினைகளால் அடையப்படும் பொருளாகிய பிணிப்பு, பல இதழ்களையுடைய மலர் போலும் குளிர்ந்த கண்ணினளும், மாமை நிறத்தினளு மாகிய நம் தலைவியினிடத்தினின்றும் பிரிந்தால் கைகூடி வருவதே என்றாலும்,

மாண்புடைய நெஞ்சமே அவளை நீங்குதலை மறந்து விடு. அவளைப் பிரியாது, நிமிர்ந்த அவளது முலைப்பரப்பு விம்முமாறும், செம்மையான அவளுடைய அணிகள் ஒலி செய்யுமாறும், பன்முறையும் தழுவித்தழுவி, நாடோறும் நம் தலைவியானவள் இல்லறமாகிய வினையோடும் கலந்து மகிழும்படியாகக் கூடியிருப்பதையே இனி நினைப்பாயாக!