பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 109


கானத்தைக் கடந்து செல்லும் பறவைகளும் வருந்துவதற்கு ஏதுவாகிய பெருவெப்பமும் உடையதாயிற்று அந்த நீண்ட வழி. உளி போன்ற வாயினையுடைய கொடிய பரற்கற்கள் அடியிற் பதிந்து வருத்துதலால், இன்னவிடத்திலே இன்ன கேடுதான் வருமென்று நடப்பவர் அறியமுடியாத, மூங்கில்களும் கரிந்தொழிந்த காடு அது. வலிய களிற்றினையொத்த காளை ஒருவனுடன், அக்காட்டுவழியாக என் மகள் கடந்து போனதற்காக யான் வருந்தினேன் அல்லேன். -

அவளை யான் பிரிந்து, உலைக்கண் ஊதும் துருத்தி போல உள்ளுயிர்த்து மெலிந்து, தீயிலே வேவதுபோலும் வெய்ய நெஞ்சமொடு, கண்துயில் பெறேனாய், அவளையே கனவிற் கண்டு கண்டு வாய்வெருவிப் புலம்புகின்றேனே!

ஒளி தங்கிய படையினையுடைய கரிகால் வளவனோடு வெண்ணிப் போர்க்களத்தே போரிட்டுக், களத்திலே புறப் புண்பட்டமைக்கு நாணினான் சேரலாதன். தான் போரிட்டுத் தோற்றழிந்த அந்தக் களத்தின் ஒரு புறத்தேயே வடக்கிருந்தான். மிகவும் துன்பந் தருவதாகிய அந்த இனிய செய்தியைச் சான்றோர் கேட்டனர். பெறுதற்கரிய துறக்கத்திற்கு அவனோடு தாமும் சென்றுவிடும் பொருட்டாகத் தாமும் தம் உயிர்களை நீத்தனர். அதுபோல,

இவ்விடத்தே காதலை விரும்பி, என்னைக் கைவிட்டுப் பிரிந்து போதலைச் செய்யாத என் உயிரோடு கிடந்தே யானும் நொந்தேன்.

சொற்பொருள்: 4. விளிமுறை அறியா - இன்னவிடத்திலே

இன்ன கேடு வருமென்று அறியாத, 6. ஒழிந்து - விட்டிருந்தது. 13. இன்னா இன்னுரை-மரிக்கின்றான் என்ற துயரமும், புறப்புண் நாணி உயிர் விடுகின்ற சிறப்பினனாயினன் என்றலால் இனிமையும் கொண்ட உரை.14.உலகம்-வீர சுவர்க்கம்.17.புலந்து - புலந்தேன் எனத் தன்மைவினை ஆக்குக.9. கனவ-கனாக் கண்டு வருந்த, விளக்கம்: சான்றோர் தங்களுக்கு அவன் அயலான் ஆயினபோதும், அவன் பிரிவுக்காற்றாது உயிர் நீத்தனர்; யானோ, என் உயிரனைய மகள் பிரிந்தபோதும் உயிரோடும் வாழ்கின்றேனே எனப் புலம்புகிறாள்.

'பிரிந்து, இவண் காதல் வேண்டி, என் துறந்து போதல் செல்லா என் உயிரோடு புலந்து கனவ' எனக் கூட்டி, உயிர் என்றது மகளைக் குறித்தது எனவும் கொள்ளலாம். 'உயிரனைய மகள் ஆதலின், உயிர் என்றனள்.