பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 115



நும்மைப் பிரிந்திருக்கின்ற தனிமைக் காலத்திலே, நும்மை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் குளிர்ச்சியுடன் அசைந்து வருதலையுடைய பண்பற்ற வாடை எம்மை வருத்தாநிற்கும். அவ் வாடைக்குக் குறித்தபருவத்திலே தும் வருகையை யாம் பெற்றோமில்லை. நீர் வரும் காலத்தை நோக்கித் தாழ்ந்து, மனைமரமும் ஒடியுமாறு வலித்தும், பலரும் துயின்றுவிட்ட நள்ளிரவுகளிலும், நெடுநேரம் நுமக்காகக் காத்துக்காத்து வீட்டுப்புறத்தேயே ய்ாம் நின்றோம். அங்ஙனம் நின்ற எமது நிலை,

வனைந்து பண்ணினாற்போலப் பணைத்து எழுந்துள்ள என் இளைய முலைகள் அமுங்குமாறு, பன்முறை பன்முறை, எம்முடைய விளங்கும் தொடிகளையுடைய முன்னங்கைகள் வளைந்து நுமது முதுகினைச் சுற்றி அணைத்துக் கொள்ள, நும் மார்பினைத் தழுவி யாம் அடையும் இன்பத்தினும் எமக்கு இனிதாயிருந்தது. (அவன் மீளவும் பிரிவானோ என்ற அச்சமே அவளை இப்படி மனங்கசந்து கூறச் செய்தது எனலாம்)

சொற்பொருள்: 3. வேட்டத்து - வேட்டையிடத்து, விளிவிடம் - உறங்கும் இடம். 4. வரியதள் - புலித்தோல். 10. புலம்பின் புலம்பால்.

விளக்கம்: “குறத்தியர் தந்தைமார், கூதிர்க்காலத்துக் காடுகளிலே தங்குமிடம் இல்லாதுபோயின காலத்திலே வீட்டிலே வந்து உறங்குவர். அதுபோல, நீயும் வேறு தொழில்கள் செய்யவியலாத காலத்து வந்தனையோ?” எனக் கூறி வருந்துகிறாள் தலைவி. வருந்துவார்க்கு வருத்தம் தெளிய உதவாது மேலும் வருத்துதலால், வாடை பண்பற்ற வாடையா யிற்று. மனைமரம் ஒசிய என்றது, அவள் அதனைப்பற்றி நெடுக நின்றனளாதலின் மனை வாழ்க்கையாகிய தழைத்துச் செழிக்க வேண்டிய பசியமரம், இடையே நின் பிரிவால் வலுவிழந்து ஒடிந்து போகுமாறு எனவும் கொள்க. பலர்மடி கங்குள் என்றது, தான் உறக்கம் பெறாமையையும் உணர்த்தும்.

59. படி ஞிமிறு கடியும் களிறு!

பாடியவர்: மதுரை மருதனிளநாகனார். திணை: பாலை, துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. சிறப்பு:நல்லந்துவனார் பாடிய திருப்பரங்குன்றத்து முருகனும், குருந்த மரத்தை வளைத்த கண்ணபிரானும்.

(அவன் பிரிந்து சென்றதனால் அவள் கலங்கினாள். தோழி, அவளுக்கு ஆறுதல் கூறுவாளாகத் தான் சொல்லுகிறாள். ‘பிடியானையின்மீது பாசமும் காதலும் கொண்டொழுகும் களிறு;