பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அகநானூறு -களிற்றியானை நிரை


அதனைக் காணும் அவர் நின்னையும் நினையாரோ? நினைவர், விரைந்தும் வருவர் என்கிறாள்.) -

          தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
          பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
          வருந்தினை, வாழியர், நீயே - வடாஅது.
          வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
          அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் 5

          மரம்செல மிதித்த மாஅல் போலப்
          புன்தலை மடப்பிடி உணிஇய்ர், அம்குழை,
          நெடுநிலை யாஅம் ஒற்றி, நனைகவுள்
          படிஞ்டுமிறு கடியும் களிறே - தோழி! -
          சூர்மருங்கு அறுத்த சுடர்.இலை நெடுவேல், 10

          சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து,
          அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை,
          இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
          தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
          தாம்பா ராட்டிய காலையும் உள்ளார், - 15

          வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச், சேய்ந்நாட்டு
          அருஞ்செயற் பொருட்பிணி முன்னி,நப்
          பிரிந்துசேண் உறைநர் சென்ற ஆறே!

தோழி! குளிர்ந்த நீருள்ள குளத்திலே நிறைந்திருக்கும், வண்டினம் படியும் துணைமலர்கள் போன்ற நின் கண்களின் பேரழகினையெல்லாம் இழந்துவிட்ட தன்மையளாயினை! அவனை நினைந்து நினைந்து பெரிதும் வருந்தினவளுமாயினை! வாழ்வாயாக!

சூரபத்மாவினை அவன் சுற்றத்தோடும் தொலைத்த ஒளி சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன், சினம் மிகுந்த முருகன். அச சினம் தணிந்து, அவன் அருளுடைய வனாகக் கோயில் கொண்டிருக்கும் தட்பம் வாய்ந்தது திருப்பரங்குன்றம். நல்லந்துவனார் பாடிய, சந்தன மரங்கள் செறிந்த, உயரமான அத் திருப்பரங்குன்றத்து மலையிலேயுள்ள, இனிய தீவிய பசுமைவாய்ந்த சுனையிலேயுள்ள, தண்ணிய நறிய செங்கழுநீர்ப்பூவாலியன்ற, பெரிய ஒப்பனையினாலே அழகுடன் விளங்கிய, கொண்டை அசைதலையுடைய நின் முதுகினைத் தாம் பாராட்டிய காலத்தையும், நம் தலைவர் நினைத்தனர் இல்லையே!

பருத்த இறையினையுடைய பணைத்த தோள்கள் மெலிவடையும் படியாகத் தொலைவிலுள்ள நாட்டிற் சென்று