பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அகநானூறு - களிற்றியானை நிரை


விட்டுத் தலைவி அகலுதலும் கூடாதெனக் கவலும் இட்டாள். அதனைக் குறியிடத்தே வந்து நிற்கும் தலைமகனுக்குத் தோழி உரைத்து, ஆதலின் விரைந்து வேட்டுவந்து அவளை மணந்து கொள்ளுவாயாக’ என்கிறாள்.)

          பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்
          கொடுந்தொழின் முகந்த செங்கோல் அவ்வலை
          நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
          உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
          அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து, 5

          கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
          திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம்
          ஒண்தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய,
          'ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை,
          கோதை ஆயமொடு வண்டல் தைஇ, 10

          ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி'எனக்
          கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற்
          கொற்றச் சோழர் குடந்தை வைத்த
          நாடுதரு நிதியினுஞ் செறிய
          அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே! 15

தலைவனே! பெரிய கடற்பரப்பிலே இருந்த சிவந்த இறால் மீன்களும் அஞ்சி நடுங்குமாறு, மீன்களை முகக்கும் கொடிய தொழிலையுடைய நேரிய கோலையுடைய அழகிய வலையினைக் கைக்கொண்டவாறு, நீண்ட படகிலிருந்து மீன்பிடிக்குந் தொழிலிலே இறங்கிய தன் தந்தைக்கு, உப்பினை விற்றுக் கொண்ட நெல்லினால் சமைத்த மூரலாகிய வெண்சோற்றை, அயிரை மீனையிட்டு ஆக்கிய அழகிய புளிக்கறியினைச் சொரிந்து, கொழுத்த மீன் கருவாட்டுடன் அவனுடைய இளைய மகள் கொடுத்துக் கொண்டிருப்பாள். அத்தகைய இடமாகிய, திண்ணிய தேரினையுடைய சேரனது தொண்டியைப் போன்ற, எம்முடைய ஒள்ளிய வளையலைத் தழும்பு உண்டாகும்படியாக அழுத்தா திருப்பாயாக

'வாடைக் காற்றுக் குவித்த உயர்ந்த மணல்மேடாகிய அடைகரையிலே, கோதைகள் சூடிய ஆயத்தாராகிய நின் தோழியரோடு வண்டலிழைத்து விளையாடினாலும், நின் ஒளி மேனி வாடிவிடுமே' என்று, எக்காரணமின்றியும் எம்மைச் சினந்து கொள்பவள் அறங்கருதாத எமது தாய். அவள், எம்பால் வளையல் அழுத்திய தழும்புகளைக் கண்டால், வெல்லும் வேலினையுடைய வெற்றி பொருந்திய சோழர்கள் குடந்தைக்கண்ணே பாதுகாவலுடன் சேமித்து வைத்த,