பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அகநானூறு - களிற்றியானை நிரை


விளங்கும் அகன்ற இலையினையும், எண்ணெய் கனியப்பெற்ற வலிய தண்டினையுமுடைய, வெற்றி பொருந்திய வேலினை ஏந்திய வீரர்கள், விரைந்து செல்லும் தம் குதிரைகளையும் நம்முடன் முடுக்கி வர, நாம், வீடுதிரும்பிச் செல்லும் செலவினை விரும்பினோமானால்,

விரைந்து செல்லும் பெருமழையின் நீர், வரி வரியாக இழைத்த செம்மண் நிலப்புறங்களிலே, தேர்விடும் நெறியிலேயுள்ள ஈரமணலைக்கானங்கோழிகள் கிளறப், பாம்புகள் வாழும் புற்றின் குளிர்ந்த மேற்புறத்தைக் குத்தி, அம் மண்ணுடன் விளங்கும் கொம்புகளையுடைய தலைமையினை உடைய ஆனேறானது, எக்காலத்தும் தன்னுடன் நிற்றலை விரும்பிய, தனது இளைய பசுவினைத் தழுவிக் கொண்டதாக, ஊரினை நோக்கிவரும் மாலைப்பொழுதிலே, கறவைகள் யாவும் ஒருங்குசேர்ந்து தம் கன்றுகளை அழைக்கும் குரலினவாய்த், தொழுவங்களிலே நிறையுமாறு சென்று சேரும் அவ்வேளையிலே, அப்பசுக்கள் பூண்டுள்ள தெள்ளிய மணிகள் அழகியதாக ஒலிக்கும் இனிய ஒலியினைத், தனிமையைக் கொண்டுதான் வருந்தியிருக்கும் மாலை நேரத்திலே கேட்கும் போதெல்லாம், உள்ளங் கலங்கினவளாக இருப்பவளது, செயலற்ற நிலையினைப் போக்குவதற்கு இடமாயிருக்கும்.

சொற்பொருள்: 2. புள்ளியற் கலிமா - பறவைகள் போலச் செல்லும் வேகத்தினையுடைய மதர்த்த குதிரை. 3. வகை - செலுத்தும் கூறுபாடு. வள்பு கடிவாள வார். போகின்ற கடுமையான வேகத்தினால் அற்றுப் போகாத வாரினைத் தெரிக என்க. 7. அயர்தல் - விரும்புதல், 9. வாரணம் - காட்டுக்கோழி. 11. அண்ணல் - தலைமையினை யுடைய மடநாகு - மடப்பத்தையுடைய இளைய பசு 15. தெண்மணி - தெள்ளிய மணி. ஐதியம்புதல் நடக்க நடக்க விட்டு விட்டு ஒலித்தல்.

விளக்கம்: ஏறு மடநாகு தழுவிவரக் காண்பவள், தன் காதலனை எண்ணி எண்ணி வருந்துவாள் என்க, ஈர்மணல் வாரணஞ் சிதரலும், மண்ணுடைக் கோட்டதாக ஏறு விளங்களும் கார்காலம் வந்ததெனக் காட்டும். அவன் வருவதாகக் குறித்த காலத்திலே வராததால், அவள் பெரிதும் கலங்கி நொந்தனள் என்க.

65. ஈரம் சேரா இயல்பு!

பாடியவர்: மாமூலனார். திணை:பாலை துறை: வேறுபட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி கூறியது. 'பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல்' என்பர்