பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அகநானூறு - களிற்றியானை நிரை

வானளாவிய கடல் அலைகளின் மீது நெருப்புக் காணப்படுவதுபோலப் பொருத்தமாகத் தோன்றும். யாமரங்கள் உயரமாக வளர்ந்துள்ள அகன்ற இடத்திலே, பாறைகளில் ஏறியும் இறங்கியும் செல்லுகின்ற, மூங்கில்கள் சாய்ந்து கிடக்கும் சிறிய நெறியானது, பட்டினியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகிலே நடந்து செல்வது போலத் தோன்றும். காட்டினை மேம்பாடு உடையது என்று சொல்வதற்குக் காரணமான, நிமிர்ந்த கோட்டினையுடைய களிறுகள் பாதைகளைக் காவல் பூண்டிருக்கும். அத்தகைய கடத்தற்கரிய சுரநெறிகள், மூங்கில்போன்ற தோள்களையும், மணம் நாறும் ஐவகைக் கூறுபாடமைந்த கூந்தலினையும், திரண்ட தேமலையுடைய முலையினையும், பூப்போலும் மையுண்ட கண்ணினையும் உடைய மகளிர்க்குச் செல்லுதற்கு அரியனவாகும். இங்ஙனம் கருதி, இதுவரை தாழ்த்திருந்த போக்கினை, இப்போது நம்முடன் ஒரு பெற்றியே உடன் பட்டவராக, உடன் செல்லுதலையும் அவரே விரும்பினார்.

நம் கருத்தினை உணர்ந்துகொண்ட அறிவுடன், தன் உள்ளத்துக் கருதியவற்றை மறைத்து வாழ்கின்ற அன்னையின் கடுஞ்சொல்லினின்றும் இனித் தப்புவோம்; கொஞ்சமேனும் அருள் சேராத இயல்பினையுடைய பொய்ம்மொழியே பேசும் சேரிப்பெண்டிர்களது அலரினையும் விட்டு நீங்குவோம்.

தன் நாட்டினைத் தன் வெற்றியினால் விரிவாக்கியவன் உதியஞ் சேரலாதன். அவனைப் பாடிச் செல்லும் பரிசிலர், தாம் எதிர்பார்த்ததற்கும் மேலாகப் பெற்று இன்புற்று மகிழ்வது போல, இப்பொழுது நீயும் இன்புற்று மகிழ்வாயாக!

சொற்பொருள்: 1-2. உன்னங் கொள்கையோடு - நம் மனக் கருத்தையறிந்த அறிவோடே, தானறிந்தவற்றைக் கரந்து சொல்லாதே செலுத்துகிற அன்னை; அவள் அறிந்தவை - களவுக்கூட்டம் பற்றிய செய்திகள். 5. நாடு கண்ணகற்றுதல் பிறர் நாடுகொண்டு அவற்றைத் தனதாக்குதல் 10. மால் மயக்கம்

66. சிறுவர்ப் பயந்த செம்மலோர்!

பாடியவர்: செல்லுர்க் கோசிகன் கண்ணனார்; செயலூர்க் கோசங் கண்ணனார் எனவும் கூறுவர். திணை: மருதம், துறை: பரத்தையிற் பிரிந்து தலைமகற்கு வாயிலாப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -

"தானே தன் மகனை வாயில்கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங்கண்ணோட்டமும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால், அப்பெயர்த் தாயிற்று” என்பர் பேராசிரியர்.