பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அகநானூறு -களிற்றியானை நிரை



வானளாவிய நெடுமலைகளினும் தடையின்றிச் செல்லும் வலிய தேர்களையுடையவர் மோரியர். அவர்கள், தங்களுடைய பொன்னாற் புனையப்பெற்ற தேருருள்கள் தடையின்றிச் செல்லுதற்குக் குன்றங்களை வெட்டிப் பாதையமைத்தனர். அந்தப் பாதைகளையுடைய மலைகளையும் அவர் தேரூர்ந்து கடந்து சென்றனர். ஆயினும்,

ஆடும் இயல்பினை உடைய இளைய மயில்கள் கழித்துப் போட்ட பீலிகளை வகிர்ந்து, தமது ஒலிமுழங்கும் வலிய வில்லிலே சுற்றிக் கொண்டவர்; மாட்சியுற்ற பலவான அம்புகளை உடைய கையினர்; பகைவரின் அரண்கள் பலவற்றை அழித்தவர்; ஆங்குக் கொண்ட நல்ல அணிகலன்கள் பலவற்றையும் கொண்டு தம் மன்னனுக்குத் தருபவர்; வீரர்கள் பலர். அவர்களின் பெருமான், சுடரும் மணிகள் பதித்த பெரும்பூண் அணிந்த ஆய் என்பான். அவனது காட்டிலே, அன்றலர்ந்த மலரென மணக்கும் நின்னுடைய பரந்த முலையினையுடைய மார்பினிடத்தே கிடந்து துயிலும் இன்ரிய துயிலினை அவர் மறந்து, சிறிதும் தாழ்த்திரார். (விரைவிலே வருவார் என்பது தேற்றம்)

சொற்பொருள்: ஏமுற்று மயக்கமுற்று. 4. ஆன்றிசின் அமைக. 15. சிலை - ஒரு மரமும் ஆம்.

விளக்கம்: ஈத்து உவத்தலால் வரும் இன்பம் நாடி அத்துணை இடையூறுகளையும் பொருட்படுத்தாது சென்ற அவர், நின் நலன் அழியுமாறு கைவிடார்’ என்பது கருத்து. மோரியர் மோகூர்ப் பழையனோடு போரிடச் சென்றபோது, மலையிலே வெட்டி வழியமைத்துச் சென்றனர் என்பர். மார்பின் மணம் மேனியின் நறுமணம். மோரியரின் தேர்களே செல்லக்கூடாத மலைகளையும் இவர் கடந்தனர் என்பது, பொருள் முயற்சியிலே இவர் கொண்ட பேரார்வத்தைக் காட்டுவதாம். ஆஅய் கானம் பொதியத்தைச் சார்ந்த காடு; சண்பகமலர் இங்கே சிறப்பு.

70. இராமக் கவித்த ஆலம்

பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார். திணை: நெய்தல். துறை: தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. சிறப்பு:பாண்டியர் இராமன் கதை.

(களவுக்காலத்தே எத்துணைத் தடை நேரினும் ஆர்வமுடன் வந்தவன் காதலன். அதனால், அலர் மிகுந்தது. அவன் மணம் வரைந்த பின்னரோ, ஊர் அலரவிந்து அமைதியுற்றது. அதனைத் தோழி தலைவியிடம் வந்து கூறுகிறாள்.)