பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அகநானூறு -களிற்றியானை நிரை


பெருங்கடல் ஒலிக்கின்ற துறைமுற்றத்திலே, போரிலே வெற்றிபெறும் ஆற்றலுடைய இராமன், இலங்கையிற் படை யெடுத்தல் பற்றிய மறைகளை ஆராயும் பொருட்டாகப் புள்ளொலிகள் இல்லையாகச் செய்த, பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம்போல, ஆரவாரமுடைய அவ்வூரும் ஒலியடங்கப் பெற்றது. (ஆனால், அவர்தான் வரவில்லை என்க.)

சொற்பொருள்: 9 வரிக்கும் - சித்திரம் எழுதினாற் போல உதிர்ந்து கிடந்து அழகுசெய்யும்.13 கவுரியர் - பாண்டியர். கோடி - திருவணைக்கரை, 15 மறை அவ்விடத்துத் தாமும் பரிகரமும் விசாரிக்கப்புக்க மறை

விளக்கம்: பரதவர் தம் முயற்சியானே வேட்டை வாய்த்ததாகினும், குறுங்கண் வலையைப் பாராட்டுவர்; அவரும் தம் முயற்சியினாலே வதுவை கூடிற்றாயினும், துணை நின்ற என்னைக் கொண்டாடினர். அயிலையைக் கடலினின்றும் நீக்கி அனைவருக்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்வித்தாற் போல, நின்னை இச் சுற்றத்தினின்றுங் கொண்டு போய்த் தம்மூரின்கண்ணே நின்னைக் கொண்டு விருந்து புறந்தந்து தம்மூரை எல்லாம் மகிழ்விப்பர்.

'நெய்தற் பூவானது, ஞாழலும் புன்னையும் கரையிலே நின்று தரையை உதிர்த்துப் புறஞ்சூழ, நீரிடத்துத் தன்னை விடாதே அலைகள் சூழ, நடுவே நின்று செருக்கி வளர்ந்து, விழவணி மகளிர் அல்குலுக்குத் தழையாய்ப் பயன்பட்டாற் போல, இருமுது குரவர் புறங்காப்ப, ஆயவெள்ளத்தார் மெய்யை விடாதே சூழ்ந்து புறங்காப்ப, இப்படிச் செல்வத்தால் வளர்ந்த நீயும், பெருமானுடைய இல்லறமாகிய வாழ்விற்குத் துணையாகப் போகின்றாயன்றோ என்று வியந்து கூறியவாறும் கண்டு கொள்க.

இராமன், ஆலமரத்தே ஒலிசெய்திருந்த பறவைகளின் ஒலியை அவித்த செய்தி இதன்கண் கூறப்பட்டுள்ளது.

71. பழங்கண் மாலை!

பாடியவர்: அந்தி இளங்கீரனார்; அந்தில் இளங்கீரனார் எனவும் பாடம். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது.

‘சாக்காட்டிற்கு' உதாரணமாகக் காட்டுவர் நச்சினார்க் சினியர். 'கிழக்கிடு பொருளிற்கு' எடுத்துக் காட்டுவர் பேராசிரியர்.