பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 139


(பொருள் தேடிவரப் பிரிந்தனன் தலைவன். அவன் குறித்த காலமும் வந்தது. அவனோ திரும்பி வரவில்லை. அந் நிலையிலே, ஒரு மாலைவேளையிலே, தலைவி படும் வேதனை மிகுதியைக் காட்டுவது இந்தப் பாடல்)

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன்இன் மையின் பற்றுவிட்டு, ஒருஉம்
நயன்இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர,
மைஇல் மான்இனம் மருளப், பையென 5

வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல்இரு வானம் அம்மஞ்சு ஈனப்,
பகல்ஆற்றுப் படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, 10

ஆர்அஞர் உறுநர் அருநிறம் சுட்டிச்
கூர்எஃது எறிஞரின் அலைத்தல் ஆனாது.
எள்அற இயற்றிய அழல்காண் மண்டிலத்து
உள்ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் - பெரிதுஅழிந்து, 15

இதுகொல் - வாழி, தோழி! என்உயிர்
விலங்குவெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே!

செல்வம் நிறைந்தவர்களை ஆராய்ந்து அடையும் உள்ளத்தினால், செல்வங் குறைந்தோர் பயனற்றவராதலினால் அவர்பாலிருந்த பற்றினையும் கைவிட்டு, அவரை விட்டும் நீங்குவர் நடுநிலைமை இல்லாத மாக்கள். அவர்களைப் போல, வண்டினம் சுளைப்பூக்களைக் கைவிட்டு விட்டு, மரக்கிளை களிலேயுள்ள புதுப்பூக்களை அடைந்தன.

குற்றமற்ற மானினங்கள் மருண்டன. உலைக்களத்திலே நன்றாக வெந்து, பின் மெல்லமெல்ல ஆறிக் கொண்டிருக்கும் பொன்னின் நிறம் போல, அந்திவானமும் விளங்கியது. வியக்கத் தக்க அறிவினை அகற்றும் செயலற்ற துன்பத்துடன், அழகிய மேகங்கள் யாவும் அகன்ற பெரிய வானம், மீண்டும் அவற்றைத் தரவும், ஞாயிற்றைப் போக்கியதுன்பந்தரும் மாலைக்காலமும் வந்தது.

காதலரைப் பிரிந்த தனிமையினால் நாமும் நோகின்றோம். மிக்க புண்பட்டு வருந்தும் ஒருவரது மார்பினைக் குறித்துக் கூர்மையான வேலினை எறிவார்போல, இக் காலமும், நம்மை வருத்துதலை ஒழியாது துன்புறுத்துகின்றது.