பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அகநானூறு - களிற்றியானை நிரை



இகழ்ச்சி இல்லாதவாறு இயற்றிய, உருவங் காணும் கண்ணாடியின் உட்பக்கத்தே ஊதிய ஆவியானது, முன் பரந்து பின் சிறுகச்சிறுகக் குறுகினாற்போல, என் வலிமையும் சிறிதுசிறிதாகக் குறைந்து வந்து, முற்றும் மாய்தலை வேண்டியதாகவும் நின்றது.

மிகக் கடுமையான சூறாவளியானது அலைத்தலால் அசையும் மரத்திலுள்ள பறவையினைப் போல, மிகவும் செயலழிந்து என் உயிர் என் உடலைக் கைவிட்டுப் போகும் காலமும் இதுதான் போலும்! தோழி! நீ வாழ்க!

சொற்பொருள்: 1. நிறைந்தோர் - செல்வம் உடையோர். 6. அந்தி - பூவுமாம். 7. ஐயறிவு - கூரறிவுமாம். 7-8. வானம் பிரிந்திருப்பவர்க்கு நோவையும் மேகத்தையும் தர. 11. சுட்டி - கருதி. 18. புட்போல, உயிர் பறந்து போம்பொழுது இதுவோ தோழி என்க.

விளக்கம்: ‘சுனைப்பூவினை மறந்து கிளைப்பூவினை நாடும் வண்டினம் போல இல்லத்து எம்மை மறந்து பொருள்வயின் மயங்கினார்' என்க. சூறல் மரத்தைக் கலைக்கப் புட்பரப்பதுபோலத், தனிமை அவளை வருத்த, அவள் உடற்கூட்டிலேயுள்ள உயிரும் மறையும் என்க.

72. கொடியனும் அல்லன்!

பாடியவர்: எருமை வெளியனார் மகனார் கடலனார்; மோகமானக் கடலார் என வேறுபாடம். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லிய தூஉமாம்.

‘அவனளி சிறப்பினும்’ என்ற துறைக்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர். ‘வந்தோன்’ அவனளி சிறத்தல், ‘தவறுடையேன்’ தன்வயின் உரிமை, ‘கொடியனும் அல்லன்’ அவன்வயிற் பரத்தமை எனவும் அவர் கூறுவர்.

(இரவுக் குறியீட்டிலே தலைமகன் சிறைப்புறத்தானாக, இரவுக்குறியின் ஏதங்கருதிக் கலங்கிய தோழியும் தலைவியும் இவ்வாறு தலைவன் கேட்கப் பேசுகின்றனர். அவன், இதனை விடுத்து விரைவிலே மணந்து கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து.)


இருள்கிழிப் பதுபோல் மின்னி, வானம்
துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்,
மின்னி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்