பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 3



அகநானூறு -
களிற்றியானை நிரை
1. பிரியலம் என்ற சொல்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(காதலன் பிரிந்து சென்றதனால் ஆற்றாமை மிகுந்தவள் ஆயினாள் தலைவி. அவள் தன் தோழிக்குத், தன் ஆற்றாமை மிகுதி புலப்படக் கூறியது இது. 'யான் வாடக்' காடு கடந்து செல்வந் தேடச் சென்றவர், தாம் முன் சொன்ன 'பிரியலம்' என்ற தம் உறுதிச் சொல்லையும் பொய்த்தனரே என அவள் வருந்துகின்றாள்.)

வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர் ஒட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண்,
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய 5

கல்போற் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ - தோழி! - சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் - நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின், 10

நிழல்தேய்ந்து உலறிய மரத்த; அறைகாய்பு,
அறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வெளவுநர் மடிய,
சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்குசினை 15

நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப, ஆருற்று,
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி,முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரே?