பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 5





2. கங்குல் வருதலும் உரியை!


பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: பகற்குறிக் கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. சிறப்புற்றோன்: பொதினித் தலைவன் நெடுவேள் ஆவி.

(தன் தலைவியைச் சந்திக்கப் பகற்குறியிடத்தே வருகின்றான் ஒரு தலைவன். அவனுக்குத் தலைவி இற் செறிக்கப்பட்ட செய்தியைக் கூறி, விரைய அவளை மணம் வேட்டு வருமாறு தோழி அறிவுறுத்துகின்றாள்.)

கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையோடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது5


கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவி அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின்மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய?10


வெறுத்த ஏஎர், வேய்புரை பனைத்தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை, பைம்புதல்15


வேங்கையும் ஒள்ளினர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே!

வளமையான இலைகளையுடைய வாழையின் காய்கள் மிகுதியாக விளங்கும் பெருங்குலையில், தாமாகவே முதிர்ந்து பழுத்த இனிமையான வாழைக் கனிகள், உண்ணுபவர்களைத் தம் இனிமை மிகுதியினால் திகட்டச் செய்து அதிகமாக உண்ணாதபடி தடுக்கும் சாரற் பலாவின் இனிய சுளைகள், முறைமைப்பட்ட பாறைக்கண் அமைந்த நெடிய சுனையின் நீர், நன்கு விளைந்த நறுந்தேன் ஆகியவற்றை எல்லாம், தன் அறியாமையினால் அடுத்தடுத்து உண்ட ஒர் ஆண் குரங்கானது, அதன் பக்கத்தே மிளகுக் கொடிகள் படர்ந்து வளர்ந்திருக்கும் சந்தன மரத்திலே ஏறுவதற்கும் முடியாதாகி, நறுமணமிக்க பூக்களாகிய படுக்கையிலே களிப்புடன் கிடந்து உறங்கும். இவ்வாறு, தாம் எதிர்பாராத இன்பத்தை நின் மலையகத்துப் பல்வேறு விலங்கினங்களும் எளிதாகப் பெற்று மகிழும்.

2