பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

அகநானூறு - களிற்றியானை நிரை



          செங்கண் இரும்புலி குழுமும் சாரல்
          வாரல் - வாழியர், ஐய! நேர்இறை 5

          நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
          காவல் கண்ணினம் தினையே; நாளை
          மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
          ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
          தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை, 10

          உருமுச் சிவந்து எறிந்தஉரன்அழி
          பாம்பின் திருமணி விளக்கிற் பெறுகுவை -
          இருள்மென் கூந்தல் ஏமுறு துயிலே!

ஐயனே! நீ வாழ்வாயாக! நெடிய மலையடுக்குகளிலே எல்லாம் காண்பவர் கண்ணொளி கெடுமாறு, மின்னல்களும் ஒளிர்கின்றன. மிக்க மழையும் பொழிந்து கொண்டிருக்கிறது. இத்தகைய அடைமழை நாளில், நள்ளிரவிலே, யானையானது நடுங்குமாறு, அதனைத் தாக்கி வருத்திய, வளைந்த கோடுகளையும் சிவந்த கண்களையும் உடைய பெரும்புலிகள் முழங்குகின்ற, மலைச்சாரலின் வழியாக, இனியும் நீ இவ்விடம் கருதி வராதிருப்பாயாக. -

அழகிய முன்கையினையும், நீண்ட மெல்லிய மூங்கிலை யொத்த தோளினையும் உடைய, நின் தலைவியாகிய இவளும்யானும், இனித் திணைப்புனம் காத்தலைக் கருதியிருக்கின்றோம். அதனால்,

நாளைப் பகல்வேளையிலே, மந்திகளும் ஏறி அறிய மாட்டாத உயர்மரங்கள் செறிந்த இருண்ட காட்டிலே, ஒள்ளிய செங்காந்தள் மலரவிழ்ந்திருக்கும் அவ்விடத்தே, குளிர்ந்த பல அருவிகள் வீழ்கின்ற தன்மையுடைய இடத்தின் ஒரு புறத்தே, இடி சினந்து தாக்கினதனால் வலியிழந்து கிடக்கும் பாம்பினது, அழகிய தலை மணியாகிய விளக்கொளியிலே, இருண்ட மெல்லிய கூந்தலினளான இவளிடத்தே, இன்பம் உறும் துயிலினையும் நீ அடைவாய். (அதனால், ஐயனே, இனிப் பகலிலேயே வருக.)

சொற்பொருள்: 1. கண்கெட மின்னுதல் - மின்னலின் ஒளி கண்களைப் பறிக்கும் என்றலால், 2. படுமழை - அடை மழை. பானாள் பாதி நாள். 4. குழுமும் - முழங்கும்; கூடித் திரியும் எனலும் ஆம் 5. நேர் இறை இலக்கண நேர்மையுடைய அழகிய முன்னங்கை.7.கண்ணினம்-கருதினம்.8.இறும்பு-அடர்ந்த காடு. 10. தாழ்நீர் - சுனையும் ஆம், 14 - 12. பாம்பின் திருமணி - நாகரத்தினம். 14. ஏமுறுதல் - இன்புறுதல்.