பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 179



93. முயங்குகம் சென்மோ!

பாடியவர்: கணக்காயனார் மகனார் நக்கீரனார். திணை: பாலை. துறை: வினைமுற்றி மீளலுறும் தலைமகன், இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

“வணிகர் பொருள்வயிற் பிரிந்தவாறு என்றும், ‘புறத்தினைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவி வந்தது' என்றும், நச்சினார்க்கினியர் இதனைக் கூறுவர்.

"தன் ஆள்வினைக்குத் தக்க, பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள்’ என்பது உம், கருதிய கருத்தினாற் காமக் குறிப்புப் பிறந்தமை" என்பர், பேராசிரியர்.

(சென்ற வினைமுடித்துத் தன் இல்லத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கின்றான் ஒரு தலைவன். இடை வழியிலே, அவன் நெஞ்சம் தன் அழகு மனைவியிடத்தே தாவிச் செல்லுகின்றது. தான் வினைமுடித்து வரும்வரையும், அவள் ஆற்றியிருந்த பிரிவுத்துயரம் நீங்க, ஆன் பொருநை மணலினும் பலவாக அவளைத் தழுவுவோம் என்று, தன் நெஞ்சிற்குள் சொல்லுகின்றான்.)

கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்,
கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து,
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன 5
பெறல்அரு நன்கலம் எய்தி நாடும்
செயல்அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்,
அரண்பல கடந்த, முரண்கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள்அங் காடி நாறும் நறுநுதல் 10

நீள்இருங் கூந்தன் மாஅ யோளொடு,
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்,
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர் விளக்கத்து,
நலம்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப, 15

முயங்குகம் சென்மோ - நெஞ்சே! வரிநுதல்
வயம்திகழ்பு இழிதரும் வாய்புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி,
ஆள்கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கைக்,
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை 2O