பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

அகநானூறு -களிற்றியானை நிரை


          திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்,
          தெண்நீர் உயர்கரைக் குவைஇய
          தன்ஆன் பொருநை மணலினும் பலவே!

உறவினர்களுக்கு நேர்கின்ற கேடுகளை, நீக்கி, அவர்களைத் தாங்குதல் வேண்டும்; இளைஞர்களாயுள்ளவர் வயிறார உண்ணுதல் வேண்டும் கேளிரும் அல்லாராய்ப் பிற வகையிலே உறவுடையாரும் கெழுதகைமையுடையவராக ஒழுகிவருமாறு செய்தல் வேண்டும்; இந்த எண்ணங்களால், பொருளிட்டும் முயற்சிக்குத் தூண்டிய ஊக்கத்துடன் நெஞ்சிலே விருப்பமும் மிகுந்தது.

ஆத்திமாலை, சூடும் அடும் போராற்றலினை உடைய சோழர்களது அறங்கெழுமிய நல்ல அவையினரை உடைய உறையூரைப்போன்று, பெறுதற்கரிய நல்ல கலன்களை அடைந்து, "யாவரும் விரும்பும் செயற்கரிய செய்வினையினை முடித்தலும் வேண்டும்’ எனவும் கருதினோம். அங்ஙனம் முடிக்கவும் செய்தோம். ஆயின், இனிப் பகையரண்கள் சென்று பலவற்றையும் வென்றிகொண்ட முரண்மிகுந்த தானையினையுடையவனும், வாடாத வேப்பந்தாரினை உடையவனுமான பாண்டியனது, மதுரைநகரின் காலைக் கடைவீதியினைப்போல மணக்கும் நறிய நுதலையும், நீண்ட கருங்கூந்தலையும், மாமை நிறத்தையும் உடையவளாகிய நம் தலைவியுடன் சென்று சேர்வோம்.

மலையைக் குடைந்து இயற்றியதுபோன்ற வானளாவிய நெடுமனையினிடத்தே, நுரையை முகந்து அமைத்தாற் போன்ற மென்மையான மலரணையினையுடைய உயர்ந்த கட்டிலினிடத்தே, நெடிய விளக்கின் ஒளியிலே, நன்மை பொருந்திய நம் மார்பிலே, நம் தலைவியின் மார்பகத்துப் பூண்கள் வடுப்படுத்துமாறும், இறுகத் தழுவுவோம்.

வரிபொருந்திய நெற்றியினையும், வலிமை திகழ்தலால் முழக்கமிடும் தன் வாயிற்புகும் மதத்தினையும், கூற்றின் வலிமையுடன், நிலத்தின்கண்ணே சுருட்டி எரிந்து நெருங்கி வந்து ஆட்களைப் பற்றிக் கொல்லுதலைத் தப்பாத, அச்சம் வருகின்ற பெருங்கையினையுமுடைய, கூடிய பெரிய யானைப் படையினையும், நெடிய தேர்ப்படையின்ையும் உடையவன் சேரமான். அச் சேரமானது, செல்வமிகுந்த சிறந்த அகன்ற நகரமாகிய கருவூரின் துறைமுன்னால், தெளிந்த நீரினையுடைய தண்ணிய ஆன் பொருநை என்னும் ஆற்றின் உயர்ந்த கரைகளிலே குவிந்துள்ள மணலினும் பலவாக, யாம் அவளைத் தழுவித்தழுவி மகிழ்வோம். அதனால், விரைந்து அவளிடத்தே செல்வாயாக, எம் நெஞ்சமே!