பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

அகநானூறு - களிற்றியானை நிரை


எனும்படி, செலவிற்குப் போதாத, கடுமையாகச் செல்லக்கூடிய குதிரைகளுள், நல்லவைகளாக நன்கு பூட்டப்பெற்ற தேரிலே, வளைந்த கொடிஞ்சி பொலிவுற, ஏறியும் அமர்ந்தனை.

தேன் பாய்ந்து வண்டினம் ஆரவாரிக்கும் குளிர்ந்த நறிய முல்லை நிலத்தே, புதர்களிலே பூத்துக் கிடக்கும் கொடிய வரையினிடத்தே, பொய்த்தோல் போன்ற உள்ளிடில்லாத வயிற்றினவும், மயங்கிக் கிடந்தாலொத்த தாழ்ந்து தொங்கும் பெரிய செவியினவும் ஆகிய வெள்ளாட்டின் வெண்மையான குட்டிகள், புற்கென்ற குடுமியினையுடைய சிறுவர்களோடு குதித்துச்சென்று, மன்றின் கண்ணே சுவையான இலையினை யுடையதாயிருக்கும் ஆத்திமரத்தின் அழகிய தளிரைக் கடித்துக் கொண்டிருக்கும் சிற்றுார்கள் பலவும் பிற்பட்டு ஒழியுமாறு, அவற்றையும் கடந்து வந்தனை.

இம் மாலைக் காலத்திலேயே, நீர்வடியும் கண்ணினளாகப், பலவற்றையும் எண்ணி எண்ணித், தனிமையுற்று வாடியிருக்கும், ஆராய்ந்த தொடியணிந்த நின் தலைவியானவள் அணிந்து கொள்ளுமாறு, அவளுடைய கொத்தான கூந்தலிலே, மலரையும் கொணர்ந்து சூட்டினை! இனிதான ஒன்றைச் செய்தனை எம் தலைவனே! நீ வாழ்வாயாக!

சொற்பொருள்: 1. தேம் - திசையுமாம். இளையர் - இளையராகிய வீரர். அவரும் தத்தம் வீடு திரும்ப என்ற படி முள் - குதிரையைச் செலுத்தும் சமுதாடு, தாற்றுக் கோலும் ஆம். 7. சினை - கொடிஞ்சி.10 மாழ்குதல் - மயங்குதல் 12. ஆர் - ஆத்தி. 17. குரல் - தினைக் கதிர் போல விளங்கும் கொண்டை

விளக்கம்: இதனுள் வினைமுடித்த காலைத் தேரிளையர் செலவிற்கேற்ப ஊராது, கோலூன்றின் உலகிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத் தேரேறி, இடைச்சுரத்திலே தங்காது, மாலைக் காலத்து வந்து பூச்சூட்டினை; இனிது செய்தனை, எந்தை வாழிய! என, மேற்கோள் காட்டி உரைத்தனர் நச்சினார்க் கினியர்.

105. முகைதலை சிறந்த வேனில்!

பாடியவர்: தாயங்கண்ணனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய தாய் சொல்லியது. சிறப்பு: எழினி என்பான்.

(செல்வத்துடன் வளர்ந்த தன் மகள், தங்களையெல்லாம் வெறுத்துத் தன் காதலனுடன் உடன்போக்கிலே சென்று விட்டதறிந்து, இங்ங்ணம் புலம்புகிறாள், அவளைப் பெற்றெடுத்த தாய். யாங்குவல்லுநள்கொல்?’ என்ற சொற்களிலே, தாய்மையின் அரிய பாசம் ஒளிரக் காணலாம்.)