பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

அகநானூறு -களிற்றியானை நிரை



108. அருளால் ஒத்தன்று மன்னால்!

பாடியவர்: தங்கால் பொற்கொல்லனார். திணை: குறிஞ்சி துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

(தலைவன் தலைவியை மணந்துகொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடாது, இரவுக்குறி நேர்தலிலேயே மனஞ் செலுத்துகின்றான். அவன் கடந்து வரவேண்டிய வழியின் துன்பங்களை எண்ணித் தலைவி நடுங்குவாள். அதனை அவனுக்கு அறிவுறுத்தி, விரைந்து மணம் வேட்டு அவள் துயரைப் போக்குமாறு செய்வதற்குத் தோழி இங்ஙனம் உரைக்கின்றாள்.)

          புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
          ஒத்தன்று மன்னால் எவன்கொல்? முத்தம்
          வரைமுதற் சிதறிய வைபோல், யானைப்
          புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
          பளிங்குசொரி வதுபோற் பாறை வரிப்பக், 5

          கார்கதம் பட்ட கண்அகன் விசும்பின்
          விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி,
          படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
          ஆர்உயிர்த் துப்பின் கோள்மா வழங்கும்
          இருளிடைத் தமியன் வருதல் யாவதும் 10

          அருளான் - வாழி தோழி! - அல்கல்
          விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
          அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோற்,
          காயா மென்சினை தோய நீடிப்
          பல்துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள் 15

          அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி
          கைஆடு வட்டின் தோன்றும்
          மைஆடு சென்னிய மலைகிழ வோனே!

தோழி! வாழ்க! வருத்தத்தைச் செய்யும் பாம்பினது அரிய நஞ்சினையுடைய தலைகள், புள்ளிகள் விரவிக்கிடக்கும் மயிலினைக் கண்டு அஞ்சி விரியும். அதுபோலக் காயாவின் மெல்லிய கொம்புகள் தோய்தலால், நீண்டு தூக்கிய பல துடுப்புக்களைப் போன்ற, அசையும் குலைகளையுடைய காந்தள்கள், அழகிய மலர்களை உடையவாயின. அவற்றின்கண், நறிய தாதினைக் குடைந்துண்ணும் வண்டுகள், மகளிர் கையின்கண் வைத்து ஆடும் வட்டுக்களைப் போலத் தோன்றும்,