பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

அகநானூறு - களிற்றியானை நிரை


          நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி,
          நின்றோன் போலும் இன்றும்என் கட்கே! 25

மாலைபோன்று நெருங்கிய தோழியரோடு, கடலிலே ஒருங்கு சேர்ந்து விளையாடியும், கடற்கானலிலே சிற்றில் இழைத்தும், சிறுசோறு ஆக்கிக் குவித்தும், வருந்திய களைப்புத் தீர, யாம் சிறிதே இளைப்பாறி இருந்தோம்.

ஒருவன் எம்மருகே வந்தான். பெரிய மென்மையான மூங்கில்போலும் தோள்களையும், மடப்பத்தையும் உடைய நல்ல பெண்களே! பகலும் ஒளியிழந்தது. மிகவும் தளர்ச்சி உடையேன். மெல்லிய இலைப்பரப்பிலே நீங்கள் இடும் விருந்தினை யானும் உண்டு, கல்லென்ற ஆரவாரமுடைய இந்தச் சிறுகுடியிலே தங்கிச் சென்றால் என்னவோ?’ என்றும் சொன்னான்.

அவனைக் கண்டு, தலைகவிழ்ந்த முகத்தினர்களாக, ஒருவர் முதுகுப்பின் மற்றொருவராக ஒளிந்து கொண்டோம். இழும் என்னும் மெல்லிய குரலிலே, இவை நுமக்கு உரியன அல்ல; இழிந்த கொழுமீனாலாகிய உணவு' என்றோம்.

நீண்ட கொடிகள் அசைந்து பறக்கும் நாவாய்கள் தோன்றுகின்றன. அவற்றைக் காண்போமா?’ என்று கூறி, எம் சிற்றிலைக் காலாற் சிதைத்துவிட்டு, அங்கு நில்லாது ஒடிப் பெயர்ந்தவன், பலருள்ளும், என்னையே குறிப்பிட்டுப் பார்க்கும் பார்வையோடு, 'நல்ல நுதலினையுடையவளே! யான் போகின்றேன்’ என்று, என் நெஞ்சம் அழிந்திடக் கூறினான்.

யானும், "நீ போவாயாக’ என்றேன். என்னலும், என்னை நோக்கியவனாகத், தனது தேரின் கொடுஞ்சியினைப் பற்றிக் கொண்டவனாக, அவனும் நின்றான். இன்றும் என் கண்ணுள், அவன் அன்று நின்ற நிலை நிற்பது போலிருக்கிறதே!

இதனை அன்னை அறியினும் அறிவாளாக அலர் கூறும் வாயினரான இம் மெல்லிய சேரியினர் கேட்பினும் கேட்பாராக! "இஃதன்றிப் பிறிதொன்றும் இல்லாததனை நீ அறியுமாறு கூறிக், கொடுஞ்சுழிகள் மேவிய புகாரிடத்துள்ள தெய்வத்தை நோக்கி, நினக்குக் கடிய சூளும் யான் செய்து தருவேன்! -

சொற்பொருள்: 5. கடுஞ்சூள் கடுமையான சபதம். 6. தொடலை தழைமாலை. 12. எல்லும் எல்லின்று பகலும் ஒளியிழந்தது; பொழுது மாலையாயிற்று என்க. அசைவு - தளர்ச்சி. 15. இறைஞ்சிய முகம் - கவிழ்ந்த முகம் 21, என்னே - என்னையே. 22 அழிதக அழியும் தகைமையாக 24. கொடிஞ்சிதேர்ச்சீலை 15. என்று மென் மகட்கே பாடமாயின், அவனே என்றும் என் மகளுக்குக் காதலன் போலும் எனத் தாய் கூற்றாகக் கொள்க.