பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 223


ஊழுற்று முதிர்ந்து வீழ்ந்த 17, 18 - பாணன் வாணன் என்றும் பாடம் உரைப்பர். சிறுகுடிகிழான் பண்ணன் முன்னரும் கூறுப்படுவது கொண்டு, பண்ணனே இங்கும் கொள்ளப் பட்டது.

118. இயல் முருகு ஒப்பினை!

பாடியவர்: கபிலர் திணை: குறிஞ்சி. துறை: செறிப்பறிவுறீஇ இரவும் பகலும் வாரலென்று வரைவு கடாஅயது.

(தினை முற்றிவிடப், பகற்குறியிடத்திலே காதலர் கூடுதலும் நின்றது. தலைவி இற்செறிக்கப்பட்டனள். அவனோ இரவுக்குறி நேர்ந்தான். இரண்டையும் மறுத்து, அவளை மணந்து கொள்ளுதலே முறையாகும் என அறிவுறுத்துகின்றாள், தோழி)

கறங்குவெள் அருவி விளங்குமலைக் கவாஅன்,
தேங்கமழ் இணர வேங்கை சூடித்,
தொண்டகப் பறைச்சீர்ப் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, -
இயல்முருகு ஒப்பினை, வயநாய் பிற்படப், 5

பகல்வரின், கவ்வை அஞ்சுதும்; இகல்கொள,
இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்,
பெருங்கை யானைக் கோள்விழைத்து, இரீஇய
அடுபுலி வழங்கும் ஆர்.இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்; 10 .

என்ஆ குவள்கொல் தானே? பல்நாள்
புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளிகடி பாடலும் ஒழிந்தனள்,
அளியள் தான்,நின் அறிஅலது இலளே!

ஒலிக்கும் வெண்மையான அருவிகள் விளங்கும், மலைச் சாரலின் பக்கங்களிலே, தேன் கமழும் கொத்துக்களையுடைய வேங்கைப் பூக்களைச் சூடித், தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசையப், பெண்டிரோடும் கூடித் தெருக்களிலே கலந்தாடி, எம் சிறுகுடிப் பாக்கத்தின் கண்ணே இயங்கும் முருகனை ஒப்பவனாகி, வலிய நாய் நின் பின்னாலே வந்து கொண்டிருக்கப், பகற்பொழுதிலே நீ வந்தாயானால், அதனால் எழும் ஊரலர்க்கு யாமும் அஞ்சுவோம்!

கரிய தன் பிடியோடும் கன்றோடும் கலந்து வந்த அகன்ற வாயினையும் பெரிய கையினையுமுடைய யானையைக் கொள்ள முயன்று, தவறவிட்டு, அதனால் யானையினம் பகைகொள்ள, மறைந்திருக்கும் கொடிய புலிகள் திரியும், அரிய இருள் சூழ்ந்த நள்ளிரவிலே, நீ தனிமையாகி வருதலை நினைந்தால், அதனைக் காட்டினும் பெரிதாகவே அஞ்சுகிறோம்!