பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 227



பெருநாணத்தை அணியாகக் கொண்ட, சிறு மென் சாயலுடைய இவள், தனது மாட்சியுடைய நலம் சிதையுமாறு, ஏக்கமுற்று, மதர்த்த அழகினையுடைய குளிர்ந்த கண்கள் கலுழ, ஓயாது அழுதலையும் தொடங்கிவிட்டனள்.

பெருமானே உப்பங் கழியிலேயுள்ள சுறாமீன் தாக்குதலால் உற்ற புண்பட்ட காலினையுடைய கோவேறு கழுதை, நீண்ட நீரினையுடைய கரிய கழியிலே செல்லுதற்கு இயலாது மெலிந்தது. ஆகவே, வலிய வில்லினரான நின் இளையரோடு, இவ்விரவிலே செல்லாது, இளைப்பாறப்,

பனைமரங்கள் ஓங்கிய வெண்மணல் செறிந்த தோட்டங் களிலே, அன்றில்கள் அகவிக்கொண்டிருக்கும் அவ்விடத்திலே, சிறிய பூங்கொத்தினை உடைய எம் பெருங்கழி நாட்டின்கண் வந்தனையாய், நீதான் சிறிது பொழுது தங்கிச் சென்றால் சிதைகுவதுதாம் யாதுமுண்டோ?

சொற்பொருள்: 1.நெடுவேள்-முருகன்.ஆரம்-வெண்கடப்ப மாலை என்க. 2. செவ்வாய் வானம் - செக்கர் வானம். 3. பறையுகப்ப - பறத்தலை விரும்ப. 10. எறிதல் - தாக்கி வருத்தல். புண் + தாள் - புட்டாள். அத்திரி கோவேறு கழுதை, 11. பரி - செலவு. 12 உளையர் ஏவலர். 16. குரல் - இங்கே பூங்கொத்து.

மேற்கோள்: 'தோழி தலைவனை வேளாண் பெருநெறி வேண்டிக் கொள்ளுதலுக்கு' இதனைக் காட்டுவர் இளம் பூரணர்.

விளக்கம்: 'இரவிலுந் தங்கிச் செல்க' என்பாள், தலைவி இரவிலே அவனை நினைந்து நினைந்து படுகின்ற பிரிவுத் துயரைக் கூறினாள் என்க.

நக்கீரனாரின் பெயராலே வழங்கிவரும் இச் செய்யுளிலும், அவர், 'நெடுவேள் மார்பின் ஆரம் போலச் செவ்வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் பைங்காற் கொக்கினம், என, செவ்வேட் பெருமானைச் செவ்வானத்துக்கும், அதன் கண்ணே வளைவாக நிரையிட்டுப் பறக்கும் கொக்கினத்தை, அவன் மார்பின் வெண்கடப்ப மாலைக்கும்.அல்லது முத்தாரத்துக்கும் உவமித்து, நம்மை மகிழ்விக்கின்றனர்.

'முருகன் நற்போர் நெடுவேள் ஆவி' என மாமூலனாரின் முதற் செய்யுளுள் முருகனைக் குறிக்க, இக் கடைச் செய்யுளும் அதனைக் குறிப்பிட்டு நின்றது, களிற்றியானை நிரையைக் கவினுறுத்துவதும் காணலாம்.

திருமுருகாற்றுபடையிலே உதயத்துக் கதிரைப் பெருமான் திருமேனிக்கு உவமித்துப் போற்றியவர், இங்கே மாலைச் செஞ்ஞாயிற்றின் ஒளியிலும் அவனது செம்மேனிக் கவினையே கண்டு போற்றுகின்றனர்.