பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 231



பரத்தையின் வாயிலாக மிகவும் நுட்பமாக இதன்கண் உரைக்கப் பெற்றுள்ளது. 'ஆலங்குடி' என்னும் ஊரினர் இவர். இது சோழநாட்டின் கண்ணுள்ள ஒரு சிவத்தலம். கல்வெட்டுக்களில், 'இரும்பூளை' என்று காணப்படும். புதுக்கோட்டைப் பகுதியிலும், நெல்வேலிச் சீமையிலும் ஓர் ஆலங்குடி இருக்கிறது. 'வங்கன்’ என்ற பெயர், இவர் வங்கத்துச் சென்றுவரும் வணிகராயிருக்கலாம் என்ற எண்ணத்தையும் தருகிறது.

ஆலம்பேரிச் சாத்தர் (47, 81)

இவர் மதுரையைச் சார்ந்த ஆருலவிய நாட்டு ஆலம்பேரி என்னும் ஊரினர். நெய்தலும் பாலையும்,சிறப்புறப் பாடியவர். கடலனது விளங்கில் என்னும் ஊரையும், வானவன் மறவன் பிட்டன் என்பானின் குதிரைமலையையும், நெடுஞ்செழியன் வென்ற தலையாலங்கானத்துப் போரையும், நேமியன்’ என்னும் ஒரு வள்ளலையும் பாடியுள்ளார். அவர்கள் காலத்தவரா யிருக்கலாம். இவர் பாடியவை, அகம் 4, நற்றிணை 4. ஆக 8 பாடல்கள். இந்நாலுள், 'இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியனின் மழைவிளையாடும் வளங்கெழு சிறுமலையினையும் (47), மாவண் கடலனின் விளங்கிலையும் (81), இவர் போற்றி யுள்ளார். இந்த விளங்கில் மதுரை மாவட்டத்து விளாம் பட்டியோ, அல்லது இராமநாதபுரத்து விளாங்குளத்துரோ என்பது ஆராய்தற்கு உரியதாகும்.

ஆவூர் மூலங்கிழார் (24)

'ஆமூர்' என்பதே ஆவூர் என்றாயிற்று எனவும், அது சோழ நாட்டினது எனவும் உரைப்பர். ஆக்கள் மலிதலால் 'ஆவூர்' என்றும் கருதலாம். இவர் வேளாண் மரபினர். மூல ஒரையிலே பிறந்தவர் ஆதலின் மூலங்கிழார் எனப்பெற்றனர். அகநானூற்றுள் 3, புறநானூற்றுள் 8, ஆக 11 செய்யுட்கள் இவர் பாடியன. இவராற் பாடப்பெற்றோர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கீரஞ்சாத்தன், மல்லிகிழான் காரி ஆதி, சோணாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்போராவர். இந்நூலுள் வரும் இவரது பாடலுள் (24), 'வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை’ என்று, தமிழகத்துக் 'கீரர்' என்னும் பார்ப்பன மரபினர் சங்கறுக்கும் தொழில் செய்து பிழைத்து வந்ததையும், அவர்கள் வேதவேள்வியில் ஈடுபடாதவர் என்பதையும் குறிப்பிடுகிறார். ‘விசும்பு உரிவது போல மழை பொழிந்தது' என்ற உவமை நயமும் காணலாம். இவர் கூறியுள்ள பாசறை, எந்தப் போர்க்களத்தது என்று அறியுமாறில்லை.