பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 235


பாங்கன் தன் தோழர்களிடம் தலைவியினுடைய பிரிவாற்றாமையைக் கூறும் இந்தப் பாடல் மிகவும் உருக்கமாக உள்ளது. இவரது புறநானூற்றுப் பாடலும் கொழு தனை இழந்த மனைவின் நிலையையே உருக்கமாகக் கூறுகின்றது.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டின் (25)

அகநானூற்றுள் இந்தப் பாடலும், புறநானூற்றுள் 71-வது பாடலும் இவர் பாடியவை. புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள ஒலியமங்கலமும் அதைக் சூழ்ந்த நாடும் 'ஒல்லையூர் நாடு’ எனப் பெறும். பேராலவாயர் முதலிய புலவர்கள் இவனைப் பாராட்டியுள்ளனர். இவன் தேவியும் சிறந்த புலமை உடையவராவர்.அவர் பாடியது புறம் 246-வது செய்யுள்.பாண்டி நாட்டு மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, பொதியில் திதியன், இயக்கன் ஆகியோர் இவனுடைய நண்பர்கள். இவன் பெயரால் பூதப்பாண்டி என்ற ஊர் ஒன்றும் நாஞ்சிற் பகுதியில் நிலவுகிறது. அவ்வூரன் இவன் எனவும், ஒல்லையூர் நாட்டை வென்றவன் எனவும் சிலர் உரைப்பர். இவனுடைய புறப்பாட்டு (புறம் 71) அன்றைய அரச உள்ளத்தின் பேராண்மையைத் தெளிவுபடுத்தும் அறிவுக் கருவூலமாகும். இவன் இறந்தபோது, இவன் மனைவியும் தீப்பாய்ந்து உயிர் நீத்தனள். இது இவரது இல்லற மேன்மைச் சான்றாகும்.

ஒளவையார் (11)

களிற்றியானை நிரையின் 97-வது பாடலும் இவர் பாடியதே என்பர். இவர் பாணர் மரபினர். அதியமான் நெடுமான் அஞ்சியிடம் நெருங்கிய நட்புக்கொண்டிருந்தவர். நாஞ்சில் வள்ளுவன், தொண்டைமான், சேரமான் உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி ஆகியோரையும் பாடியுள்ளனர். அகநானூற்றுள் 4 பாடல்களும், குறுந்தொகையுள்15 பாடல்களும், நற்றிணையுள் 7 பாடல்களும், புறநானூற்றுள் 33 பாடல்களும் ஆக 59 பாடல்கள் இவர் பாடியன. சேரமான் பெருமாள் காலத்து ஒளவையாரும், ஆத்திச்சூடி முதலியன பாடிய ஒளவையாரும், தனிப்பாடல்கள் பலவற்றைப் பாடிய வரும் இவரின் வேறாவர். பெண்பாற் புலவர்களுள் சிறந்த புலமை முதிர்ச்சியுடையார் பலருமே ஒளவையார் என்று அழைக்கப்பட்டனர். அதனாற் போலும் இவரெல்லாம் ஒருவரேயென மயங்கும் நிலையும் உண்டாயிற்று. அரசியல் தூதராகவும், ஆலோசகராகவும், அரசர் பலரும் போற்றும் சிறப்புடன் திகழ்ந்தவர் இவர்.

கடுந்தொடைக் காவினார் (109)

இந்த ஒரே பாடல்தான் இவருடையதாகக் கிடைத்துள்ளது. 'கைப்பொருள் இல்லையாயினும், மெய்க் கொண்டு, இன்னுயிர்