பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

அகநானூறு - களிற்றியானை நிரை


பாடியவை குறு.6, நற்.2, அகநா 2 ஆகப் பத்துப் பாடல்கள். வயல் களிலே நெல்லரிவோர் தண்ணுமை முழக்கத்துடன் வேலையில் ஈடுபடுவர் என்ற செய்தியையும், இவர் தம் பாடலுள் கூறுகின்றார். யானும் காதலென், யாயும் நனி வெய்யள், எந்தையும் கொடீஇயர், வேண்டும் அம்பலூரும், அவனொடு மொழிமே எனவும் (குறு. 51), வாராதமையினும் அமைக, சிறியவும் உளiண்டு விலைஞர்கை வளையே (குறு.17) எனவும், 'ஒண்டொடி மகளிர் வண்டலயரும் (குறு. 238) எனவும், நயமான உள்ள நெகிழ்வுகளை இவர் பாடல்களுட் காணலாம்.

சாகலாசனார் (16)

அகநானூற்றுள் இந்தப் பாடலும், 270-வது பாடலும் இவர் பாடியவை. இந்தப் பாடலுள் இவர் காட்டும் குடும்பச் சித்திரம் மிகவும் சுவையுடையதாகும். கழுமலத்துள் குட்டுவன் இயற்றிய போரினைப் பற்றியும் இதன்கண் இவர் குறித்துள்ளனர். இவர் பற்றிய வேறு செய்திகள் எவையும் கிடைத்தில.இந்தப் பாடலுள், இல்லாள் தன் மகனைப் பரத்தையின் மகன் எனக் கூறியதாகக் கூறும் ஊடல்நலம் காணலாம்.

சீத்தலைச் சாத்தனார் (53)

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவராகக் கருதப் படுபவரும், மதுரை நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் காலத்தவருமான இவர் பெரும் புலவராக விளங்கியவர். பெளத்தக் கொள்கைகளிலே ஈடுபாடு உடையவர். மதுரை நகரிலே தானிய வாணிகம் செய்து வந்தவராதலின் கூலவாணிகன் என்ற அடைமொழியுடன் கூறப்படுபவர். நற்றிணையுள் 3, அகநானூற்றுள் 5, புறநானூற்றுள் 1, குறுந்தொகையுள் 1, ஆக 10 பாடல்கள் இவர் பாடியவை. புறநானூற்றுள் இவராற் பாடப்பெற்றோன் பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆவன்.

செல்லூர்க் கோசிகன் கண்ணனார் (66)

செல்லூர் பாண்டி நாட்டுள் ஒர் ஊர். கோசிகன் இவர் பார்ப்பனர் எனக் காட்டும். கண்ணனார் பெயர். கணவன் மனைவி யரின் ஊடற்காட்சி மிகவும் நயமாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. செயலூர்க் கோசங்கண்ணனார் எனவும் இவரைக் குறிப்பிடுவர்.

"இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, மறுமை உலகமும் மறுஇன்று எய்துப, செறுநறும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி" என உரைக்கும் இவருடைய சொற்களிலே, அந்நாளிற் புதல்வரைப் பெற்றவர்கள் கொள்ளும் உள்ளப் பூரிப்பினை நன்றாக உணரலாம்.