பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 241


சேந்தம் பூதனார் (37)

சேந்தனுடைய மகனார் பூதனார் என்க. சேந்தன் என்பாரின் மகனாராக வேறுசில புலவர்களும் கூறப்பட்டுள்ளனர். அகநானூற்றுள் 84, 207 பாடல்களும், குறுந்தொகையுள் 90, 226, 247ஆகிய பாடல்களும், நற்றிணையுள் 69, 221 ஆகியவையும் இவர் பாயடின. மதுரை எழுத்தாளனார் பெயரால் உள்ள இந்நூலின் 84-வது பாடலைப் பாடியவரும் இவரே என்பது வேறு பாடம்.

தங்கால் முடக்கொற்றனார் (48, 108)

பாண்டிய நாட்டுத் திருத்தங்கால் இவர் ஊர். ‘முடம்’ உறுப்பு நோக்கி அமைந்தது. கொற்றனார் எனவும் கொல்லனார் எனவும் பாடம். பொற்கொல்லன் என்பது பூட்கொல்லன் எனவும் காணப்படும்; அதாவது பணித் தட்டார் என்க. மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகனாரும், தங்கால் பொற் கொல்லனாரும், இவரும் ஒருவரே என்பர். இவர் பாடியவை அகம் 48,108, 355, குறுந்தொகை 217, நற்றிணை 313, புறநானூறு 326 ஆக, ஆறு செய்யுட்களாகும். பருத்திப் பெண்டின் செய்தியை இவர் நயம்படக் கூறியுள்ளார். ‘காந்தள் நறுமலரிலே ஆடுந்தும்பி கையாடும் வட்டில்போலத் தோன்றும் (அகம் 108) என்று சிறப்பாக உவமித்தவர் இவர்.

தாயங்கண்ணனார் (105)

சோழ நாட்டு எருக்காட்டுர்த் தாயங்கண்ணனார் என்பவர் இவரே. எருக்காட்டுர் தஞ்சை மாவட்டத்து நன்னிலந் தாலுகாவிலுள்ளது. இவர் பெயர், ஏடெழுதுவோரால் தையங்கண்ணனார், கதையங்கண்ணனார் எனப் பிழைபட எழுதப்பட்டும் உள்ளன. தமிழகத்தோடு யவனர் செய்து வந்த வாணிகத்தையும், சேரலனிடத்திருந்த பொற்பதுமையைப் பாண்டியன் போர் செய்து பெற்றமையையும், மற்றும் பல வரலாற்றுக் குறிப்புக்களையும் இவர் பாடல்களுள் காணலாம். நற்றிணையுள் 1, குறுந்தொகையுள் 1, அகத்தில் 7, புறத்தில் 1, ஆகப் பத்துப் பாடல்கள் இவர் பாடியவையாக கிடைத்திருக்கின்றன. 'பந்து புடைப் பன்ன பாணிப் பல்லடிச் சில்பரிக் குதிரை’ என்று இவர் குதிரைச் செலவைக் கூறும் (அகம் 105) நயம் காண்க.

நக்கீரனார் (6, 17, 78, 91, 110)

அகநானூற்றுள் 16, குறுந்தொகையுள் 8, நற்றிணையுள் 7, பத்துப் பாட்டுள் முதலாவது திருமுருகாற்றுப்படை, 7-வது நெடுநல்வாடை, புறநானூற்றுள் 3 பாடல்கள் ஆகியவை இவர் பாடியன. தந்தையார் மதுரைக் கணக்காயனார்; மகனார் கீரங் கொற்றனார். நக்கீரர் நாடிய நாற்பது என்ற நூலும் இயற்றியவர்.