பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

அகநானூறு - களிற்றியானை நிரை


விளங்கியவன். இவன் பாடியன, நற் 1, குறுந்தொகை 1, அகநானூறு 7, புறநானூறு 1, ஆக 4 பாடல்கள். இப்பாடலுள் (அகம் 29) வரும், தோழியர் உரையாடும் சொல்லாட்சித் திறம் பெரிதும் இன்புறத் தக்கதாகும்.

பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி (26)

கானப் பேரெயில் என்பது காளையார் கோயில் அதனை ஆண்ட வேங்கைமார்பனை வென்று, அவன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதால், இவன் இப்பெயர் பெற்றனன். மாவெண்கோ என்னும் சேரமானுடனும், இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியுடனும் நட்புடையவன். கடைச்சங்கத்தை ஆதரித்தவன். அகநானூறு இவன் சபையிலேயே தொகுக்கப் பெற்றதென்பர். குடும்ப வாழ்விலே காதலும் ஊடலும் இயற்கை யாக எழுவன. அதனை மிகவும் சுவையோடு காட்சியாக்கித் தருகின்றனன் இப் பாண்டியன். ‘புதல்வன் பிறந்தபின் எப்படிப் பாசம் உருவாகிறது என்பதை மெய்யாகக் காண, இப்பாடல் உதவும்; பெண்மையின் சால்பை அறியவும், அந்நாளில் தமிழ் நாட்டை ஆண்டவரின் அறிவு வளத்தை உணரவும் உதவும்.

பாலை பாடிய பெருங்கடுங்கோ (5, 99, 111)

சேரர் மரபினைச் சேர்ந்தவன். பாலைத் திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லமையுடையவனாதலின் இச் சிறப்புப் பெயர் பெற்றனன். இவனைப் பேய்மகள் இளவெயினி என்பார் புறநானூற்று 11-வது செய்யுளில் பாடியுள்ளனர். இவன் பாடியவை அகத்துள் 12, புறம் 1, நற்றிணை 10, ஆக 23 பாடல்களும், பாலைக்கலியும் ஆகும். சிறந்த அறநெறிகள் இவன் பாடல்களுள் மிளிர்வனவாம். இவன் வஞ்சிநகரின் கண்ணிருந்து அரசியற்றியவன் என்பதும், இரவலரைப் புரக்கும் வள்ளலாகத் திகழ்ந்தவன் என்பதும், இளவெயினியார் பாடலாற் புலனாவனவாம். 'கிழவர் இன்னோர் என்னாது, பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர் பெயர்பு உறையும் (கலி; 21) என்று, பொருளின் நிலையாத இயல்பினையும், ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடுபோல்’ என அரசின் அமைதியையும், மற்றும் போரிலே மாண்டவீரனின்புகழையும் பாடிய சிறப்பினன் இவன். இரும்பொறை மரபினனான செல்வக் கடுங்கோவின் மகனாகப் பிறந்த, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையே இவன் என்பாரும் உளர். ஆனால், அவனைப் பாடிய அரிசில் கிழார், பொன்முடியார் போன்றோர், இதனைத் தெளிவுபடுத்தினாரல்லர். ஆனால், அரசில்கிழாருக்கு அரசு கட்டிலையும், மோசிகீர னாருக்கு முரசு கட்டிலையும் வழங்கிய இரும்பொறையை நினைந்தால் அவனே பெரும்புலமை பெற்ற பெருங்கடுங்கோவாயிருத்தல் பொருந்தும் எனவும் கூறலாம். மேலும்,