பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

அகநானூறு -களிற்றியானை நிரை


சிறப்பித்துள்ளார். மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை என அறநெறி தவறாத பாண்டியரின் ஆட்சிமரபை இவர் போற்றுவர் (அக 27)

மதுரைக் கவுணியன் பூதத்தனார் (74)

"கவுணியன், என்ற பெயர், இவரைப் பார்ப்பன மரபினர் எனக் காட்டும். பூதத்தனார் இவர் பெயர். கோவலர்கள் பண்டும் வேய்ங்குழல் ஊதும் வழக்கமுடையவர்கள் என்பது இவருடைய இந்தப் பாடலால் நன்கு புலனாகும். 'முத்தத்தனார்’ எனவும் இவர் பெயர் வழங்கும்.

மதுரைக் காஞ்சிப் புலவர் (89)

மாங்குடி கிழார், மாங்குடி மருதனார் என்பவரும் இவரே. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மதுரைக்காஞ்சி பாடியதனால் இச் சிறப்புப் பெயரினை இவர் பெற்றனர். பாண்டியன் நெடுஞ்செழியனால் மிகவும் மதிக்கப்பெற்ற மாபெரும் புலவர் இவர். இவர் பாடிய செய்யுட்கள் குறுந்தொகை 3, மதுரைக் காஞ்சி 1, நற்றிணை 2, அகம் 1, புறம் 6, ஆக 13 ஆகும். கழுதைகளைப் பாரஞ்சுமக்க வணிகர் பயன்படுத்திய செய்தி இப்பாடலுள் கூறப்படுகிறது.

மதுரைச் செங்கண்ணனார் (39)

அகத்துள் இப்பாடலும், நற்றிணையுள் 122-வது பாடலும் இவர் பாடியவை. கண்ணனார் என்ற பெயரோடு விளங்கிய பலருள் இவரும் ஒருவர். செங்கண் ஒர் அரச கருமம் என்பர். 'காடுகளில் தீப்பற்றி எரியும் செய்தி இப்பாடலுள் காணலாம். பிரிந்த காதல் காதலியர் கனவுகள் கண்ட வயணம் சுவைபடக் கூறப்பட்டுள்ளது.

மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் (70)

புறநானூற்று 334 - வது செய்யுளை இயற்றிய மதுரைத் தமிழ்க் கூத்தனாரின் மகனார் இவர். கடுவன் குடி என்ற பெயருடன் பாண்டிய நாட்டில் பல ஊர்கள் உள்ளன.அவற்றுள் ஒன்றினைச் சார்ந்தவர் இவராயிருக்கலாம். மள்ளனார்’ என்ற சொல், இவர் படையிலே பணியாற்றியவர் என்பதையும், இவர் தந்தையார் 'தமிழ்க்கூத்து நடத்தியவர் என்பதையும் உணர்த்தும். குறுந்தொகை 82ஆம் செய்யுளும், நற்றிணை 150-ஆம் செய்யுளும் இவர் பாடியன. குறுந்தொகை 72-வது பாடலியற்றிய மள்ளனாரும் இவரே என்றும் சிலர் கருதுவர். இவர் இராமாயணக் கதையின் சுவையான ஒரு செய்தியை இப்பாடலுள் கூறுகிறார். பாண்டியர் "கவுரியர்' என்றழைக்கப் பெற்ற செய்தியினையும், இதன்கண் காணலாம்.