பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ★ 253



வெள்ளி வீதியார் (45)

அகநானூற்றுள் இரண்டு பாடல்களும், குறுந்தொகையுள் 8 பாடல்களும், நற்றிணையுள் 3 பாடல்களும் இவர் பாடியவை. இவர் பெண்பாலர். மதுரை வெள்ளியம்பல வீதியில் இருந்ததால் இப்பெயர் பெற்றனர். இவர் கணவர் இவரைப் பிரிந்து செல்லப் பிரிவுத் துயரால் மிகவும் வருந்தி உழன்றவர் இவர். பாடல்களைத் தொடர்புபடுத்திக் காணின், பிரிவால் வரும் பெண்மையின் ஏக்கத்தை மிகவும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். 'வெள்ளி வீதியைப் போல ஒன்றுஞ் செலவயர்ந்திசினால் யானே' என ஒளவையாரால் சுட்டிக் கூறப்பட்டவர் இவர். திருவள்ளுவமாலைப் பாடல் ஒன்றும் இவர் பெயரால் உள்ளது. 'ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ?' என, இவர் உரைப்பதனால், அவர்க்குப் பிற்பட்டவர் எனலாம்.

வெறிபாடிய காமக்கண்ணியார் (22,98)

நற்றிணையுள் 268-வது பாடலும், புறநானூற்றுள் 27,302 வது பாடல்களும் இவர் பாடியுள்ளனர். பெண்பாற் புலவர். 'வேலனுக்கு வெறியயரும் சிறப்பினை' முறையாக இவ்விரு பாடல்களுள்ளும், நற்றிணைப் பாடலிலும் குறித்துள்ளதனால், இப் பெயர் பெற்றனர். இயற்பெயர் தெரியவில்லை. இவர் கூறும் வெறியாடும் நிகழ்ச்சி, இவருடைய வாழ்விலேயே நடந்தது போலும்!

பெயர் காணாத பாடல்கள் (114, 117)

கதிரவன் மறையும் மாலையிலே, காட்டிலே உதிர்ந்து கிடக்கும் பூக்களைக் காண்கின்றான்; 'வேலன் வெறியாட்டு அயர்கின்ற களத்திடத்தே தாவியுதிர்ந்த சிறிய பலவாகிய கலப்புற்ற பூக்கள்' போன்றன என்று கருதுகின்றான். இது, தன் வரவுக்கு ஏங்கி தன் காதலி, மாலை வேளையிலே, அது குறித்து வெறியாடிக் குறிகேட்டபடி துன்புற்றிருப்பள் எனும் நினைவிற் கூறியதாகும். இதனை 14ஆம் செய்யுளில் காணலாம்.

117ஆவது பாடல் வாணனது சிறு குடியின் வளத்தை நயமுடன் கூறுவதாகும். 'மாமரத்திலிருந்து தானே கனிந்து தரையிலே உதிர்ந்து கிடக்கின்ற செவ்வியழிந்து போன பழந்தை, வளைந்த காலையுடைய யாமையானது, தன் பார்ப்போடு கவர்ந்து உண்ணும் பொய்கை சூழ்ந்த, பொய்யாப் புதுவருவாயுடையது வாணனின் சிறுகுடி' என்கின்றனர். சிறுகுடிகிழான் பண்ணனே 'வாணன்' என்றும் வழங்கப் பெற்றனன் போலும். 'பொலந்தொடி தெளிர்ப்பக் கைகளை வீசியபடியே, சேவடிச் சிலம்பு நகுமாறு நடக்கும்' இளமகளையும் இதனிடத்தே நாம் காணலாம்.


18