பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

அகநானூறு - களிற்றியானை நிரை


காவிரிப் புகுமுகத்திடையே மருதியால் மீட்கப்பட்டுக் கிடைத்த கணவனுடன் இன்புற்று வாழ்ந்தார். கணவனைப் பிரிந்து புலம்பும் மகளிர்களின் துயர நிலைக்கு 'ஆதிமந்தியாரைப்போல' என்று உவமித்துப் பேசும் அளவிற்கு, இவர் வரலாறு எங்கும் பரந்தது. இவரைக் கரிகாலனின் மகள் என்பர் சிலர்.

இருங்கோ வேண்மான் (36)

சிற்றரையம் பேரரையம் என்ற பகுதிகளைக் கொண்ட நாட்டை ஆண்டவன். 'உவரா ஈகைத் துவரையாண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே' இவனும் ஆவன். இவன் வமிசத்தினர், பிற்காலத்து இருக்கு வேளிர் என்றழைக்கப் பெற்றனர். கரிகாற் பெருவளத்தானால் வெற்றிகொள்ளப் பட்டவன் இவன் என்கிறார் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இவனும், நெடுஞ்செழியனோடு தலையாலங்கானத்துப்போரில், போரிட்டுத் தோற்றோடியவர்களுள் ஒருவன். கழாஅத் தலை யாரை இகழ்ந்து அவரால் பழிக்கப்பெற்றவன். 'புலிகடிமாஅல்’ என்ற சிறப்புப் பட்டம் பெற்ற குடியினன். இவன் வகுப்பினரே, பிற்காலத்து ஹோய்சாளர்கள் என்பர். இவன் எவ்வி பரம்பரையைச் சார்ந்தவன்.

உதியஞ் சேரலாதன் (65)

இவன், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று போற்றப்படுபவன். பாரதப் போரிலே பெருஞ் சோறளித்தவன் இவன். இவனுடைய மகனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவன். மற்றொருவன் பல்யானைச் செல்குழு குட்டுவன். இவன் மனைவியாரின் பெயர் நல்லினியார். இந்தப் பாடலுள் மாமூலனார் இவன் பலருடன் போரிட்டு வென்று தன் நாட்டுப் பரப்பினை விரிவாக்கிய செய்தியைக் கூறுகின்றார். சேரர்களின் பொற்காலத்திற்கு வித்திட்ட மூலமுதல்வன் இவனே யாவன்.

எருமையூரன் (36, 115)

எருமையூரன், இன்றைய மைசூர் நாட்டுப்பகுதியைச் சேர்ந்த படைத்தலைவன். 'நேரா வன்றோள் வடுகர் பெருமகன்’ என்று குறிக்கப் பெற்றவன். இவனும் பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலையாலங்கானத்திலே எதிர்த்து நின்று தோற்றோடியவருள் ஒருவன்.

எவ்வி (115)

சோழ நாட்டைச் சார்ந்த திருவீழிமிழலையும், திருநீடூரும் உள்ளடக்கிய பகுதியை ஆண்டுவந்த குறுநிலத் தலைவன் இவன். பல்வேல் எவ்வி, வாய்வாள் எவ்வி என இவனுடைய ஆற்றல்கள்