பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ★ 259


காழஅர்த் தலைவன் மத்தி (6)

கழாஅர், காவிரிக் கரைக்கண் உள்ள ஒரு துறை, உறையூருக்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஆடியபோதுதான் ஆட்டனத்தியைக் கடல்கொண்டது. இவனிடம் வேல்வீரரை மிகுதியாகக் கொண்ட பெரும்படை இருந்தது. அதனால் இவன் சோழர்களுக்குப் படைத்துணையாக நின்றனன். ஒரு முறை திருமுதுகுன்றத்துத் தலைவனாயிருந்த எழினி என்பான் சோழனுக்கு உதவாது போயினான். அவனை வென்று, அவன் பல்லைப் பறித்து வந்து, வெண்மணி என்னும் வாயிலில் பதித்த போர்மறம் உடையவன் இவன். இவனைப் பாடியோர் ஓரம்போகியார், பரணர், மாமூலனார் ஆகியோராவர். அதனால், அவர் காலத்தை ஒட்டியவன் இவன் எனலாம். இவன் வள்ளன்மையிற் சிறந்தவனும் ஆவன்.

குட்டுவன் (91)

இவனை இந்நூலின் 86 வது பாடலுள் குறிப்பிடுபவர் மாமூலனார். அவர் இமயவரம்பனைப் பாடியவர் ஆதலின், அக்காலத்தே குட்ட நாட்டினை ஆண்டவனும், இமயவரம்பனின் தம்பியுமாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனே இதன்கண் குறிக்கப்பட்டவனாகலாம். இவன் சிறந்த பெரு வீரன். இவனைப் பற்றிய மூன்றாவது பதிற்றுப்பத்தைப் பாடியவர் பாலைக் கெளதமனார் என்பவராவர். இவனுடைய சிறப்புக்களை அதன்கண் காணலாம்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (36, 57, 116)

இவனைப் பாடியோர் இடைக்குன்றூர்க்கிழார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார். குடபுலவியனார், மாங்குடி மருதனார் முதலிய பலர் ஆவர். தன் இளமைப் பருவத்திலேயே, தலையாலங்கானத்துக் கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போர் செய்து அவனைச் சிறைப்படுத்தியதுடன், சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான்,பொருநன் ஆகியோரையும் வென்றவன். மாங்குடி மருதனாரியற்றிய மதுரைக் காஞ்சிக்குத் தலைவன்.போர் மறத்துடன், சிறந்த தமிழ்ப் புலமையும் உடையவன். இந்த நூலின் - 36 - வது பாடல் இவனுடைய தலையாலங்கானத்துப்போர்ச்சிறப்பைக்குறிக்கிறது.

திதியன் (25, 36,40)

அன்னி மிஞிலியின் துயர் தீர்த்தவன் அழுந்துர்த் திதியன் என்பவன். அன்னி என்பானோடு குறுக்கைப் பறந்தலையிலே