பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 263


நன்னாடு' எனப், புலவர் கல்லாடனார் இவன் நாட்டைப் போற்றுவர். இவனே சிலவிடங்களில் வாணன் எனவும் குறிக்கப் பெறுவான்.

பாரி வள்ளல் (78)

பறம்பு மலையையும் அதனைச் சார்ந்திருந்த முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தவன் இவன். பறம்பிற் கோமானான இவன். கொடைக்குக் குறித்துப்பேசும் பெருஞ் சிறப்புடன் திகழ்ந்தவன். இவனுடைய அரிய நண்பர் கபிலர், ஒளவையார், நக்கீரர் போன்றோரும் இவனைப் பாடியுள்ளனர். இவனுடைய பெருமையைக் கண்டு மனம் பொறாத மூவேந்தரும் இவன் நாட்டை முற்றுகையிட்டனர். பறம்பு தன் வளத்தாற் குறையாதது. ஆதலின் அவனை எளிதில் வணங்கச் செய்தற்கு இயலவில்லை. முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே; குன்றும் உண்டு பாடினிர் செலினே!’ என்று கபிலர் கூறும் சொற்களிலே பாரியின் அருள் உள்ளத்தைக் காணலாம் - (அகம் 78) இந்தப் பாடலுள் மூவேந்தர் முற்றியிருந்த காலத்தே, கபிலர் கிளிகள் மூலம் நெற்கதிர்கள் கொணர்ந்து பசி போக்கிய செய்தி கூறப்பெற்றுள்ளது. வஞ்சகத்தால் - பாரி வீழ்ந்தான். கபிலர் அவன் மக்களைப் பேணினார். அருள் கொண்ட பாரியின் மக்களுக்காக, அவர் பட்ட வேதனைகள் முதலியவற்றைப் புறநானூற்றுள் பரக்கக் காணலாம்.

'பாரியது அருமை அறியார் போர் எதிர்த்துவந்த வலம் படுதானை வேந்தர்’ என்ற (புறம் 116) உள்ளக் குமுறல் அந்தப் புலவர்க்கு மட்டுமன்று அனைவருக்குமே உரியதாகும். இவன் மகளிர் பாடிய 'அற்றைத் திங்கள்’ (புறம் 112) என்ற செய்யுள், அவர்கள் வேதனையை நன்கு காட்டும். இறுதியாக, அம் மகளிரை மலையமானின் மக்களுக்கு மணமுடித்து வடக்கிருந்து உயிர் நீத்தார் கபிலர் பெருமான் என்பர்.

பிட்டன் (77)

இவன் சேரர்களின் படைமுதலியாகப் பணியாற்றியவன். அதியர்களுக்கு உரித்தாகிய குதிரைமலையின் தலைவனாகத் திகழ்ந்தவன். படையணிகளிலே மாற்றார் எத்துணை வலியுடையவராயினும், அதனைக் கண்டு அழியாத உறுதியுடையவன். இவன் ‘உலைக் கல்லன்ன வல்லாளன்’ என்று புகழ்பெற்றவன். கொடை வளத்தினும் இவன் சிறப்புடையவன். வலியுடைய சிங்கம்போன்று விளங்கியவன். இவனுடைய கொற்றத்தின் செவ்வியைக் கண்டு, 'அவன் காலில் முள்ளும் உறுத்தாதிருப்பதாக’ என வேண்டுகிறார் ஒரு புலவர்.