பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அகநானூறு -களிற்றியானை நிரை



          அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
          செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு,
          இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் 5

          உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு
          ஆலி வானிற் காலொடு பாறித்,
          துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
          நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
          அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்- 10

          கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
          தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
          நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
          குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து,
          ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 15

          துனைபரி துரக்கும் துஞ்சா செலவின்
          எம்மினும், விரைந்து வல்எய்திப் பல்மாண்
          ஓங்கிய நல்லில் ஒரு சிறை நிலைஇ,
          பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
          கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி, 20
          
          கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
          பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,
          தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ-
          நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல்,
          அம் தீம் கிளவிக் குறுமகள் 25
          மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே?

கொல்லும் தொழிலிலே சிறந்ததும், கூர்மையான குறும் புழுகு எனப் பெயரியதும், வில்வீரர்களின் அம்பறாத் தூணிகளிலே மிகுதியாகப் பெய்திருக்கப் படுவதுமாகிய, குப்பி முனைகளைப் போன்று, இருப்பை மரத்திலே இருப்பை மொட்டுகள் அரும்பின. செப்புத் தகடுகள்போன்ற அதன் சிவந்த தளிர்களுக்கு உள்ளெல்லாம், நெய்போன்ற நிறமுடைய, இனிய துளையுள்ள பூக்கள் விளங்கின. அவை, தமது ஆர்க்குகள் கழன்று, காம்பினை நீக்கிக், காணக்கூடிய துளையினை உடையவாக, வானிலிருந்து பெய்யும் பனிக் கட்டிகளைப் போலக், காற்றாற் சிதறுண்டு தரையிலே வீழ்ந்தன. பவளம் போன்ற சிவந்த மேட்டுப்புறங்களிலே விழுந்து கிடக்கும் அப்பூக்கள், சிவப்பு நினத்தின்மீது வெண்ணிறக் கொழுப்பு படர்ந்திருப் பதைப் போலத் தோன்றும். பாலை நிலத்திலேயுள்ள, அழகிய குடிமக்களை உடைய, அத்தகைய எம்முடைய சிற்றுாரினிடத்தே.