பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அகநானூறு - களிற்றியானை நிரை


விரைவுபடுத்துவதற்காகத், தனக்கு முன்னேயே சென்றுவிட்ட தன் நெஞ்சத்தைப் பற்றிப் பாகனிடம் கூறுகின்றான்.

'பாங்கர்ப் பல்லி படுதொறும்' என்பது, அது கொண்டு தம் எண்ணம் நிறைவெய்தும் எனக் கருதும் மரபினைக் காட்டும்.

10. கொண்டு பெயர்தல் வேண்டும்!

பாடியவர்: அம்மூவனார். திணை: நெய்தல். துறை: இரவுக்குறி வந்து, தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலை மகனை எதிர்ப்பட்டு நின்று தோழி கூறியது. சிறப்பிக்கப் பெற்றது: சேரர் கடற்றுறையாகிய தொண்டி

(தலைமகள், தலைமகனைப் பிரிதலால் படும் வேதனை மிகுதியைக் காணப் பொறாதவள் ஆயினாள் தோழி. அதனால், அவள் நலன் அழியாமல் என்றும் திகழவேண்டுமானால், அவளை என்றும் பிரியாதிருக்கும் வகையாக, விரையவந்து மணந்து, நின் ஊர்க்கு அவளை அழைத்துப் போய்விடுவாயாக’ என்று தலைவனிடம் கூறுகின்றாள்.)

          வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
          மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
          முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப்,
          புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப!
          நெய்தல் உண்கண் பைதல கலுழப்
          பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்,
          அரிது துற்றனையால் பெரும! - உரிதினின்
          கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் - கொண்டலொடு
          குரூஉத்திரைப் புணரி உடைதரும்
          எக்கர்ப் பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் 10

          மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,
          மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
          வளங்கெழு தொண்டி அன்ன இவள்நலனே.

பெரிய கடற்பரப்பிலே எழுகின்ற அலைகளின் திவலை களை எதிரேற்றுக் கொண்ட, வானத்து மீன்களைக் கண்டாற் போன்ற, மென்மையான அரும்புகளை ஈன்றன முடம்பட்ட முதிர்ந்த புன்னைமரங்கள்.அவற்றின், பெரிய நிலையினையுடையகரிய கிளைகளிலே, கடற்பறவைகள் தங்கியிருக்கும். அத்தகைய மென்னிலமாகிய கடற்கரைப் பகுதியின் தலைவனே!

நெய்தல் பூவினைப் போன்றன மையுண்ட எம் தோழியின் கண்கள். அவை வருத்தமுற்றனவாகக் கலங்குமாறு, நீ அவளைப் பிரிந்து செல்வதையும் எண்ணினையோ? அங்ஙனம் எண்ணினை-