பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அகநானூறு -களிற்றியானை நிரை



தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினைக் கோத்து அந்த ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறை கொடுக்கும் ஆற்றலினையுடையவனும், தன்னுடைய பொதிய மலையினிடத்தே கோயில் கொண்டிருப்பவனும், பிறரால் வெற்றி கொள்ளப்படுவதற்கு அரியவனுமாகிய முருகக் கடவுளை வழிபட்டுக், குறவர்கள் கொணர்ந்து தந்த சந்தன ஆரத்தையும் அணிந்தவன்; அத்தகைய பெருமையையுடைய இரண்டு ஆரங்களையும் அழகுற அணியும், திருமகள் விரும்பும் மார்பினையுடையவன், தென்னவனாகிய பாண்டியன்.

குழியிலே வீழ்த்திக் கைக்கொண்ட பழகாத யானைகளைத், தன் ஏவலினால் செயற்படும்படி உணர்த்துவிக்கின்ற சிறுபொழுது அல்லாமல், பிற பொழுதுகள் எல்லாம், ஒரு வரையறை ஏதும் இல்லாமல், இரவலர்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பவன்; கூர்மை வாய்ந்த அம்பினை உடையவன்; கோட்டைக்குத் தலைவன்; பாண்டியனின் படைத்தலைவன் பண்ணி என்னும் பெயரினன். அவன் இயற்றிய, பயன் மிகுந்த களவேள்வியினும் காட்டில், நீர் தேடி வருவதாகக் கூறும் பொருளால் சிறந்த பயன் நிகழுமாயினும் -

மேகங்கள் தெற்கே சென்றனவாக, மிக்க மழையினைப் பொழிந்த, மழைக்காலத் தன்மையைக் கொள்ளும் கூதிர்க் காலத்துச் சாயலிற் சிறந்த இனிய துணைவியான இவளைப் பிரிந்து, வேற்று நாட்டிலே நீர் தங்குவீராயின், நீர் தேடுகின்ற பொருள்கள், எவ்வித இடையூறும் இல்லாது வந்து வாய்ப்பனவாக தக்க இடத்திலே, குற்றமற்ற தூய விரிப்பு விரிக்கப்பெற்ற படுக்கையினிடத்தே, இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பமானது, நுமக்கு வாயாமற் கழிந்து போயினும் போவதாக!

வளமுடைய வயல்களிலே, நெருப்பின் கொழுந்தினைப் போன்ற தோடுகளை ஈன்ற, வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றி நிரம்பிய நெற்கதிர்கள், அகன்ற வயலினிடத்து வரப்புக்களையே அணையாகக் கொண்டுகிடந்து அலையுமாறு, தனிமையாகிற துன்பத்தினை மேற்கொண்டு வருகின்ற தன்மையது, பனிக்காலத் தன்மையினைக் கொண்ட வாடைக்காற்று. அக்காற்றானது பூக்கள் விளங்கும் கரும்பினது ஓங்கின தண்டின் மீதிருக்கும் வெண்மையான நாரையானது ஒலிக்கும்படியாகவும் வீசும். அத்தகைய வாடை வந்து வருத்தும், நுண்மையான பல துளிகளைக் கொண்டு விளங்குவது குளிருகின்ற பனிக்காலம்!

சொற்பொருள்: 2. பேணி - பூசை பண்ணி. 7. மராஅ - மருவாத 11. தை இய செய்த வேள்வி - களவேள்வி.13. பொழுது