பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 33


வழியிடையிலேயுள்ள நெருங்கிய சேரிகளைக் கொண்ட தலைமைபெற்ற ஊர்கள் எல்லாம் அத் துளு நாட்டைப் போன்றே, பொருளற்று வரும் புதியவர்களைத் தாங்கிப் பேணும் பண்பினை அறிந்த மக்கள் தொகையினை உடையவாகுக! எம்முடைய மிகுதியான ஆர்வம் கைகூடுவதென்றால், அங்ஙனமே எல்லாம் ஆகுக!

சொற்பொருள்: 3. கொம்மை - பெருமை. அம் - சாரியை. குடுமி - தலையிலே ஆர்க்கு 4. பறைக்கண் - வட்டமான கண். அறிந்த மாக்கள் - வழங்கும் பண்பினை அறிந்த மாக்கள்; முகமறிந்த மாக்கள் - என்பர். கொடையிலே மடம் பட்டவர் எனல்பற்றி மாக்கள் என்றனர்.19. அஞ்ஞை - அம்மை மகளை, 'எம் அம்மை!’ என விளிப்பது, இன்றும் தமிழ் வழக்கு ஆகும். பாழி - ஓர் ஊர். நகர் - மாளிகை

விளக்கம்: அவர் சென்றவிடங்களில் எத்தகைய துன்பமும் இல்லாது நலமுடன் இருக்க வேண்டுமென விரும்பும் தாயுள்ளம் இங்ங்ணம் விரும்புகிறது. கோசர் வாய்மையிற் சிறந்தவர் என்பது போல வண்மையிலும் சிறந்தவர் என்பதும் இதனால் விளங்கும். நன்னனின் பாழிக் காவல் போல விழிப்புடைய காவலைக் கடந்து சென்றனள் என்பது, தலைவியின் காதல் மிகுதியையும், அவளைத் தாய் தடைசெய்ய முயன்ற முயற்சியின் அளவையும், அது பலியாமற் போனமையையும் விளக்கும். -

உள்ளுறை பொருள்: "கரடி இருப்பைப் பூவின் இனிமையிலே செருக்குடையதாகிக் கொன்றைப் பழங்களைக் கோதிப் போனதுபோல, எம் மகளும், அவனிடம் கொண்ட தொடர்பின் இனிமைச் செருக்கினால், உடன் பழகிய தோழியரையும், பெற்று வளர்த்த எம்மையும் ஒதுக்கிப் போயினாளே” என்பதாம்.

16. நீயும் தாயை இவற்கு!

பாடியவர்: சாகலாசனார். திணை: மருதம். துறை: பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்” என்றனன்; அவனுக்குத் தலைமகள் கூறியது.

(தன் கணவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டிருந் ததனை அவன் மனைவியும் அறிந்தாள். வீடு வந்த அவனோ, தான் எவரையும் அறியேன் என்றான். தன் கணவனின் சாயலுடைய வனாக இருந்த தன் புதல்வனை, அந்தப் பரத்தை ஒரு சமயம் காதலுடன் அணைத்து வாஞ்சை காட்டிய நிகழ்ச்சியைக் கூறி, அவனுடைய உறவைத்தானும் அறிந்திருப்பதை வெளியிடுகின்றாள் அந்த மனைவி)