பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 35




நான் நின்ற நிலையிலிருந்து, அதனைக் காணாதவள் போலத் திரும்பிவிடவில்லை. விரைந்து போய், அவளை அணைத்துக் கொண்டேன். "மாசற்ற இளைய மகளே! ஏன் மயங்குகின்றனை? நீயும் இவனுக்கு ஒரு தாய்தானே!” என்று அவளிடம் கூறினேன்.

தாம் செய்த களவினைக் கண்டுகொண்டவர் முன்பாக களவுசெய்தவர், தம் தவறை ஒப்புக் கொண்டு தலைகவிழ்ந்து நிற்பதுபோல, அவளும் என்முன் முகம்கவிழ்ந்து நின்றனள். நிலத்தைத் தன் கால்விரலாற் கீறினவளாக வெட்கியும் நின்றனள். வானத்துத் தெய்வமாக விளங்குகின்ற, அரிய கற்புக் கடவுளான அருந்ததியைப் போன்ற அவள், நின் மகனுக்குத் தர்யாக ஆகுதல் பொருந்துவதே எம் மகிழ்நனே! அப்படியே, யானும் அவளைப் போற்றினேன் அல்லனோ?

சொற்பொருள்: 3. மணி - பவள மணி. 4. நவிலல் - பழகுதல். யாவரும் - அனைவரும், பகைவரும். 6. தேர் - சிறுதேர்; தேர் வழங்கு தெரு, தலைவனின் தேர் செல்லுகின்ற தெருவுமாம்: அதன்கண் தமியனாய் நின்ற புதல்வன் என்க. 8. செத்தனள் பேணி - கருதிப் பேணி. செத்து ஒப்பும் ஆம். 12. எவன் பேதுற்றனை என்றது, அவள் கொண்ட பதற்றங் கண்டு கூறியது. 18. அணங்கரும் கடவுள் பிறரைத் தன் அழகால் வருத்துகின்ற எய்தற்கரிய தெய்வமகள்; 'தாக்கணங்கு' என்னும் குறள்.

விளக்கம்: தான் அவளைத் தன் தங்கையாக உவந்து ஏற்றுக்கொண்டது போலக் கூறினும், அவளை எள்ளுதலே உட்கிடக்கை என்க. 'பூண் விளங்கு இளமுலை' என்றது, தன்னினும் இளமை நலன் உடையவள் அவள் எனக் கருதிக் காமுற்ற அவனைச் சுட்டி எள்ளுவது. வருக மாள என் உயிர் என்றது, அப்பரத்தையும் நின் மையலிலேயே மூழ்கியுள்ளனள் எனக் கூறி, அஃது அவளுக்கு இயல்பன்மையென்று நகையாடிதாம்.

'நீயும் தாயை இவற்கு' எனக் கூறும் மரபினைச் சாத்தனார் மணிமேகலையுள், மணிமேகலையை 'மாபெரும் பத்தினி மகள்' எனக் கண்ணகியின் மகளாக மாதவி கூறுவதாகக் கூறுவதனாலும் அறியலாம்.

17. சீறடி வல்ல கொல்

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகளைப் போக்கிய செவிலித்தாய் கூறியது.

(செல்வமாக வளர்ந்த கன்னி, இற்செறிப்பையும் கடந்து, காவலனுடன் சுரத்து வழியே சென்றனள். 'அவள் அடிகள் அந்தப் பாதைவழி நடக்கவும் வல்லதோ' என்று ஏங்கித் துயருறுகிறாள்,