பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அகநானூறு - களிற்றியானை நிரை


பெற்ற காடு கவின் பெற்றது; அவரைப் பெறாதேனாகிய யான் இன்னும் கவின் பெற்றிலேன் என்றனள்.

24. கதிர் கரந்த வாடை!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் திணை: முல்லை. துறை: 1. தலைமகன் பருவங்கண்டு சொல்லியது. 2. தலை மகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைமகன் வேந்தனின் படையணிகளோடு சென்று பாசறையிலே தங்கி இருக்கின்றான். இரவு வேளை, அவன் உள்ளத்திலே அவனுடைய காதலியின் நினைவு மிகுதியாக எழுந்துவிடுகிறது, கார்காலம் முடிந்த முன்பனிக்காலம் வேறு அவன் மனத்தை வாட்டுகிறது.அவனுடைய காதல் வேதனையைத் தெளிவுபடுத்தும் சிறந்த உயிர் ஓவியம்)

          வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
          வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
          தலைபிணி அவிழா, கரிமுகப் பகன்றை
          சிதரல்அம் துவலை தூவலின், மலரும்
          தைஇ நின்ற தண்பெயல் கடைநாள், 5

          வயங்குகதிர் கரந்த வாடை வைகறை,
          விசும்பு உரிவதுபோல், வியல்இடத்து ஒழுகி,
          மங்குல் மாமழை, தென்புலம் படரும்
          பனிஇருங் கங்குலும் தமியள் நீந்தி,
          தம்ஊ ரோளே, நன்னுதல்; யாமே 10

          கடிமதில் கதவம் பாய்தலின், தொடிபிளந்து
          நூதிமுகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச்,
          சிறுகண் யானை நெடுநா ஒண்மணி,
          கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பு,
          தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, 15

          கழித்துஉறை செறியா வாளுடை எறுழ்த்தோள்,
          இரவுத் துயில்மடிந்த தானை,
          உரவுச்சின வேந்தன் பாசறை யேமே!

யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான், கூர்மையான அரத்தினாலே அறுத்து எடுத்த வளைகள் போக, எஞ்சிய சங்கின் தலையைப்போன்ற, கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தினை உடைய பகன்றையின் அரும்புகள், சிதறுகின்ற அழகிய மழைத்துளிகள் வீழ்தலால் மலரும். அத்தகைய குளிர்ந்த பெயல் நின்றுபோன தைத்திங்களாகிய முன்பனிக் காலத்தின் கடைநாளிலே எழுகின்ற ஞாயிறும் பனிமூட்டத்தினுள் மறைந்திருக்கும் வாடையுடன் கூடிய புலர்காலை வேளையிலே -