பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 53


மணல்மேடுகள், மணநாற்றத்தினைப் புதிதாக வீசிக் கொண்டிருந்தன. மாவின் தாதினைக் கோதிய, நீலமணியின் நிறத்தினையொத்த கரிய குயில், நாள்தோறும் சில கூறுவன போல, முறைகொண்டு, தனது நாவின் கூவுதலால்நடுநிலை மேவி ஒலிக்கும். பூக்கள் நிறைந்த கோங்கமரத்தின் கிளைகளின் மீதிருந்து, கூட்டமாகிய வண்டுகள், அவற்றின் நுண்ணிய தாதுக்களை உதிர்க்கும். அங்ஙனம் உதிர்ந்த தாதுக்கள் இலவம் பூக்களாகிய அவ்விடத்தே உதிர்ந்து கிடக்கும். பவளச் சிமிழிலே பொற்பொடியைச் சொரிந்து வைத்தாற்போல, அப்போது இலவம் பூக்கள் விளங்கும். பிரிவினால் எய்தும் துயரங்களைப் புறக்கணித்துப் பிரிபவரும்கூட, அங்ங்ணம் இகழ்ந்து பிரிந்து செல்லுவதற்கு விரும்பாத இளவேனிற் காலத்தினாலன்றோ, இவை எல்லாம் நிகழ்கின்றவாயின!

தாம் மீண்டும் வருங்காலமாக இதனையே உறுதியாக அவர் குறிப்பிட்டுச் சென்றார். அதனையே நினைந்து நீ நின் நோதலையுடைய மையுண்ட கண்களாலே நீர் வடித்துச் சொரிதல் வேண்டா. அவர் குறித்தபடி வாராமையினால் வெறுப்புற்ற நெஞ்சுடன் வருந்துதலும் செய்யாதே.

போர்புரியும் பகைவர்கள் எதிர்ந்துவரும் போரினை வென்று, அவரை அழித்த வெற்றி வில்லினைத் தன் பெரிய கையிலே உடையவன்; பொதியில் மலைக்கு உரிய செல்வன்; பொன்னால் ஆகிய தேரினை உடையவன்; திதியன் என்பவன். அவனது இனிய வெற்றி முரசினைப்போல, மலையுச்சியினின்றும் விழும் அருவிகள் ஒலிமுழங்குகிற காடுகளைத் தாண்டிப் பொருளீட்டச் சென்றோர் நம் தலைவர்!

'இளையவளே! நின்னை இங்ஙனம் துயருறச் செய்த என் உயிர் வருந்துவதாக' என்றாற் போல, மெல்லிய இனிமையான சொற்களைக் கூறிக்கொண்டு, நின் வருத்தத்தைப் போக்குவதற்கு விரைந்து வந்துவிடுவர் கண்டாய். (அதனால், நீயும் ஆற்றி இருப்பாயாக!)

சொற்பொருள்: 3. கயம் மடு. 4. தாது மலர்ந்தபோது பூவுதிர்ந்த எக்கர். 7. படுதல் - ஒலித்தல். அடுநின்று வருந்தா நின்று நடுநிலை நின்று.8. ஊழ்-முறைமை, பேடைகூவச் சேவல் கூவ என்க. 9. இதர் - வண்டு. 12. இகழ்ந்து பிரிவோரும் பிரிய ஒண்ணாத இளவேனிற் காலம் என்க.

விளக்கம்: இளவேனிற் காலத்துச் சோலைகளிலுள்ள மணல்மேடுகளில் இளையரும் கன்னியரும் இன்பமாகக் கூடி மகிழ்வர் ஆகலின், 'வதுவை மணம் கஞல' என்றனர்.