பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அகநானூறு -களிற்றியானை நிரை


தங்காராயினும் என்பது, நின் பேச்சுக்களால் தடுக்கப்பட்டு, அவர் தம் போக்கை நிறுத்தாராயினும் என்பதாம். இரத்தம் தோய்ந்த வேல்போல விளங்கும் நின் அமர்த்த கண்கள் நினக்கு வெற்றிதரும் என்பது குறிப்பு.

'மறப்போர்ப் பாண்டியராயினும், அவர் நாடுகாவலை மறத்தினாற் காவாது அறத்தினாற் காத்தனர்' எனக் கூறுவதனை, அறிந்து இன்புறல் வேண்டும்.

28. மெய்யில் தீரா மேவரு நாமம்!

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி, திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத், தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது பகலே சிறைப்புறம்.

(காதல் மீதுறத், தன் கிளியோப்பும் பணியையும் மறந்து, அவனே நினைவாக இருந்தாள் ஒருத்தி. அவள் நிலைகண்டு பதறிய தோழி, பகற்குறியிடத்தே தலைவன் கேட்குமாறு இதனைக் கூறுகிறாள். இதனால், விரைந்து அவன் தலைவியை கேட்டுவருவான் என்பது பயனாகும்.)

          மெய்யின் தீரா மேவரு காமமொடு
          எய்யாய் ஆயினும், உரைப்பல் - தோழி!
          கொய்யா முன்னும், குரல்வார்பு, தினையே
          அருவி ஆன்ற பைங்கால் தோறும்
          இருவி தோன்றின பலவே; நீயே, 5

          முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி,
          பரியல் நாயொடு பன்மலைப் படரும்
          வேட்டுவற் பெறலொடு அமைந்தனை, யாழநின்
          பூக்கெழு தொடலை நுடங்க, எழுந்துஎழுந்து
          கிள்ளைத் தெள்விளி இடைஇடை பயிற்றி, 10

          ஆங்காங்கு ஒழுகாய் ஆயின், அன்னை,
          சிறுகிளி கடிதல் தேற்றாள்.இவள் எனப்,
          பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
          உறற்கு அரிதுஆகும், அவன்மலர்ந்த மார்பே!

ஒருவர் உடலினின்றும் ஒருவர் உடல் நீங்காதவாறு விழையும், பொருந்திய காமத்தினால் நீ வருவதை அறியாய். ஆயினும், அதனால் வரும் ஏதங்களை யான் அறிவேன். அதனை உரைப்பேன் கேட்பாயாக:

நீர் இல்லையாகிப்போன பசிய தண்டுகள் தோறும், தினைக்கதிர்கள் முதிரப் பெற்றன. அவற்றைக் கொய்வதன்