பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 61




வெம்மையாற் குறையாததும், எரிபரக்கும் இயல்பினதும் ஆகிய அப்பாழிடத்தே, தம் பெருமை அனைத்தும் ஒழிந்து தளர்ந்து வழிச்செல்லுகின்ற யானையானது, நீருள்ள இடம் எதுவென அறியாமல், பேய்த்தேர் தோன்றும் இடமெல்லாம் அதனையே நீரென நினைந்து மயங்கி ஓடி, நீரற்ற ஆற்றிலே கிடக்கும் ஒடத்தைப்போல, வழியிடத்திலே வருந்திச் சோர்ந்து வீழ்ந்து கிடக்கும். நினைப்பாரையே வருத்தும், கடப்பாரின் ஊக்கமும் அரிதாகுமாறு துன்பம் விளைவிக்கும் அத்தகைய கொடிய காட்டினிடத்திலே-

பிறர் இகழ்வதனைப் பெறாது, பொருள் தேடிவரும் விருப்பத்துடன், மானமே தனக்கொரு கட்டுப்பாடாக அதன்கண் நிலைத்திருந்து, மாட்சிமையுடைய அவ்வினையின் பொருட்டாக, என் உடலானது நின்னைப் பிரிந்து அவ்விடத்துச் சென்றதே அல்லாமல், என் மடமை நிரம்பிய நெஞ்சம், நின்னிடத்திலே, இவ்விடத்துத்தானே இருந்தது! (இதனை அறியாமல் இங்ஙனம் வினவுதல் தான் முறையோ? என்கிறான்)

சொற்பொருள்: 2 மறுகுதல் வருந்ததுல். இடம் படின் இடத்தே வீழின். 5. எஃகு கத்தி. 6. தெரிதகு - ஆராயத்தக்க 8. மேவல் தண்டா - பொருத்துதல் அமையா. 9, எனையது உம் - சிறிதும். 12. எம்மென - எம்மிடத்தென்று. பறந்தலை - பாழ்நிலம். 16. கொம்மை - பெருமை. இயவுள் - தலைமை.18. அம்பி - ஒடம்.

விளக்கம்: தன் செய்வினையைத் திறம்பட நிறைவேற்று வதிலே அவன் உறுதியுடையவன் என்பது தோன்றப், "புலியின் தொடங்குவினை தவிரா, அசைவினோன்றாள் கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம்படின் வீழ்களிறு மிசையாப் புலி" என்றனர். கொடிய துயர் நிறைந்த காட்டினிடத்தும் அதனை நினைந்து துயருறாது, நின்னையே நினைத்து வருந்தினேன் எனத் தனது அன்பின் மிகுதியையும் கூறினான். ‘நின் கண்களின் பார்வையிலே யான் இன்பக் கிளர்ச்சி யுடையவனாயினேன்’ என்று போற்றியவன், அவை கலங்கித் தம் இயல்பு கெடப் பிரிந்த வருத்தமிகுதியும் காண்க.

30. பெருங்களம் தொகுத்த உழவர்!

பாடியவர்: முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன். திணை: நெய்தல், துறை: பகற்குறிவந்த தலைமகனுக்குத் தோழி சொல்லியது.

(கானற் சோலையிலே, தோழியுடன் இருந்த அவளைக் கண்டான். அவள் அவனுள்ளம் புகுந்தாள். அந்தக் காதல் அவளுள்ளத்திலும் நிலைபெற்றது. அதனால் அவள் மெலிந்தாள்.