பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அகநானூறு - களிற்றியானை நிரை


அவள் மேணிவண்ணம் கெட்டது. அவன் பெருமிதம் அவனைத் தன் குறையிரந்து காதலை வேண்டவும் விடவில்லை. இந்நிலையிலே தோழி அங்கே குறுக்கிடுகிறாள்.)

          நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை,
          கடல்பாடு அழிய, இனமீன் முகந்து,
          துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
          இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
          உப்புஓய் உமணர் அருந்துறை போக்கும் 5

          ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழிஇ
          அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்,
          பெருங்களம் தொகுத்த உழவர் போல,
          இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி,
          பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் 10

          கோடுஉயர் திணிமணல் துஞ்சும் துறைவ!
          பெருமை என்பது கெடுமோ - ஒருநாள்
          மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
          தண்நறுங் கானல் வந்து 'நும்'
          வண்ணம் எவனோ? என்றனிர் செலினே! 15

அழகான வலைகள், நெடிதான கயிறு கட்டப்பெற்றுக், குறுகலான கண்களையும் உடையன. கடலின் பெருமை குறையுமாறு, அவ்வலைகளிலே, மீன் இனங்களை முகந்து பரதவர் கொணர்வர். தம் துணைவியருடன் கூடியவராகவும், மகிழ்ச்சியினை உடையவராகவும், அவர்கள், இளைஞர்களும் முதியவர்களுமாகக் குழுமி ஒன்று சேர்வர். உப்புவிற்கும் வாணிகர்கள், அரிய கடற்றுரைகளிலே ஒட்டிவரும் வண்டிகளிலே பூட்டப்பெற்றிருக்கும் வலிமையுடைய கடாக்களைக்போல், அவர்கள் செருக்குடன் கூடுவர். நுண்மணல் செறிந்த அடை கரையிலே, ஒலிமுழக்கத்துடன், மீன் நிறைந்த வலைகளை இழுத்துக் கொணர்வர். பெரிய களத்திலே தம் செயல்களின் விளைபயனான நெல்லைத் தொகுத்த உழவர்களைப்போலத் தம்மிடம் வந்து இரந்தவர்களுடைய வறிய கலங்கள் எல்லாம் நிறையுமாறு மீன்களை வாரி வாரிச் சொரிவர். எஞ்சியவற்றைப் பல்பல கூறுகளாக்குவர். அந்தக் கூறுகளை விலை கூறி விற்பர். அதன் பின்னர், கரை உயர்ந்த திண்மையான மணற் பரப்பிலே கிடந்து உறங்குவர். அத்தகைய நாட்டுத் துறைவனே! கேளாய்:

ஒருநாள், தூய்மை செய்யப்பெறாத முத்துக்கள்போல அரும்புகள் அரும்பியிருக்கும் புன்னை மரங்களை உடைய, குளிர்ச்சியான நறிய கானற் சோலையிலே நீயும் வந்து, நுங்கள் மேனியின் வண்ணம் எத்தகையதோ?’ என, எங்களை