பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அகநானூறு -களிற்றியானை நிரை



          மருத மரநிழல், எருதொடு வதியும்
          காமர் வேனில்மன் இது,
          மாண்நலம் நுகரும் துணைஉடை, யோர்க்கே!

தோழி! தம்முடைய மாண்புற்ற நலத்தினைத் துய்க்கும் துணையாயினவரைப் பிரியாத மகளிருக்கு -

வைகறை வேளையிலே, மிக்க களிப்புடையவரான உழவர்கள், ஆள் அழைக்கும் ஒலியினையுடைய ஆரவாரத்தை எழுப்புவர். இரவின் இருளானது புலர்கின்ற அவ்விடியலில், வைக்கோலைப் பெயர்த்துக் கடாவிட்டு அலைத்து எழுப்புவர், அவர்கள் தம் தூற்றாப் பொலியினின்றும் முகந்து தூற்ற, வலியற்ற நுண்மையான தூசுகள் மேகம்போல வானிலே படர்ந்து, திசை எங்கும் மறைக்கும். தொழிற் செருக்கினால் வந்த மயக்கம் ஒழியுமாறு. தென்றற் காற்றினால் கிளைத்த அழகின் தகைமையினைக் கொண்ட வளவிய தளிர்களையுடைய மாமரத்தின் கிளிபோன்ற பசுமையான காய்களைக், கிளைக் கொத்துக் களிலிருந்து கிள்ளி எடுப்பர். அவற்றோடு, புதுக்குடங்களிலே புளிக்கும் பதமும் சேர்த்து ஆக்கிய மிகப் பெய்த கள்ளை, வெயிலினிடத்துப் பின்புறும் தோன்ற நிறுத்தி வைத்துப் பதப்படுத்தி எடுத்ததாகிய பசிய குடைகளால் குளத்திலே மண்டிய எருமைக் கடாக்களைப் போலக் குடிப்பர். கொள்ளும் பயறும் அழகுடன் பொருந்தப், பாலுடன் கலந்து ஆக்கிய வெள்ளைக் கம்பியை ஒரளவாக நறுக்கி வைத்தாற் போன்ற, வெண்மையான அவிழ்க் கஞ்சியை வளைத்து உண்ட கை தடுக்கும்வரையும் உண்பர். அதன் பின்னர், வட்டமாய் உயர்ந்த ஞாயிறு போன்ற நெற்குவியலை, நெற்கூடாக்கிச் சுற்றுவர். அதன்பின் ஞாயிற்றின் வெப்பம் அகலுமாறு, மருதமரத்தின் நீழலிலே, தம் எருதுகளோடும் சென்று தங்கி இருப்பர். அத்தகைய, அனைவரும் விரும்பும், இளவேனிற் காலம் இதுவேயாகும்!

நம் தலைவர் நம்மை மறந்து அங்கே இருப்பவர் அல்லர். ஆயினும் - அந்தக் காலம் அவரின்றி வீணே கழிந்ததே நாம் பெற்றதுதான் என்னையோ?

சொற்பொருள்: 1-2. கறங்கிசைக் கங்குல் - பள்ளி எழுச்சிக் காலம். ஒதை ஆரவாரம்,3 பொங்கழி-தூற்றாப் பொலி,தாவில் - வலியற்ற துகள் - தும்பு தூசுகள். 5. வைகு புலர்விடியல் இராப்பொழுது வைகின இருள் புலர்கின்ற விடியல். ஆட்டி அலைத்து. 8. வடித்தல் - கிள்ளி எடுத்தல், 9. புளிப்பதன் - மாதுளங்காய் முதலாகிய சில்பதம் 10, இதழ் - தோடு, 13 மிதவை -கூழ்.