பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 81


கடையப்பெற்ற மூங்கில். 8. முளிபுல் ஊகம்புல், 9. ஒடுவயின் ஒடல்- காற்றோடின இடமெல்லாம் ஒடுதல்.10. சாத்து- வாணிகர் கூட்டம் 15. ஞான்று வீழ்கின்ற போது தாழ்ந்து. கள் - வண்டு. 21. கோடு - பக்கம். குவவுதல் - திரண்டு சிறுகுதல். 20-21. புலவிதீர, அவளது அளகமும் நுதலும் நீவினான் அவன் என்க.

40. மார்பிற் சென்ற நெஞ்சு!

பாடியவர்: குன்றியனார். திணை: நெய்தல், துறை: தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழிக் கிழத்தி தோழிக்குச் சொல்லியது.

(தலைவன் பொருள்நாடிப் பிரிந்து சென்றான். அவ்வேளையிலே, பிரிவுத் துயருற்ற தலைவியானவள் தன் தோழிக்குச் சொல்லியது இது.)

          கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப,
          நீல்நிறப் பெருங்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப
          மின்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
          குவைஇரும் புன்னைக் குடம்பை சேர,
          அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத், 5

          தாழை தளரத் தூக்கி, மாலை
          அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
          காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
          துயரம் செய்துநம் அருளார் ஆயினும்
          அறாஅ லியரோ அவருடைக் கேண்மை! 10

          அளிஇன் மையின் அவண்உறை முனைஇ,
          வாரற்க தில்ல - தோழி! - கழனி
          வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
          தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
          செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை 15

          அகமடல் சேக்கும் துறைவன்
          இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே!

தோழி! மாலை வேளை, கானற் சோலையிலேயுள்ள கழிகளிலே நெய்தற்பூக்கள் குவிந்தன; நீல நிறத்தையுடைய பெரிய கடலானது பேரொலியுடன் ஒலித்தது; மீனை உண்ணும் மெல்லிய சிறகினையுடைய கடற்பறவை இனம், திரட்சி பொருந்திய பெரிய புன்னை மரத்திலேயுள்ள கூடுகளில் சேர்ந்தன; அசைகின்ற வண்டுகள் ஒலிக்கின்றன; இவ்வாறு, எல்லாமே ஒய்வுகொள்ளும் காலமாகிய மாலை வேளையிலே -