பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

{{rh|மூலமும் உரையும்|| புலியூர்க்கேசிகன் * 859}


கொஞ்சமும் தன் வருகையை ஒளியாது, ஒல்லென ஒலிசெய்யும் சிறுவர்களோடு, வலிய வாயினாலே அலர் உரைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய சிற்றுார் அனைத்தும் காணப், பாய்ந்து செல்லும் குதிரைகளின் வேகத்தால் சிறப்புற்றதாகப், பகல் வேளையிலேயே வந்து கொண்டிருக்கிறதே!

அதனைக் கண்டதும், நிறையில்லாத என்னுடைய நெஞ்சம் நடுங்கியது. அது இரங்குதற்கு உரியது! ஒடுங்கிய கருமையான கூந்தலையுடையவளே! நினக்கும் அப்படித்தான் இருந்ததோ? என்று, தோழி வரைவு மலிந்து சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. ஈர்மை - கருமை. 2. நிறையில் நெஞ்சம் - களவுக்கு உடன்பட்ட காரணத்தால் நிறையற்றதாயிற்று. 3. அடும்பு - ஒருவகை நீர்க்கொடி. 4. குப்பை - மிகுதியான. 5. பகுவாய் - பிளந்த வாய், 9. முள் - தாற்றுக் கோலின் முள். எழில்நடை - தாளக் கட்டுடன் அமைந்த அழகிய நடை, 10. வாவுதல் - தாவிச் செல்லுதல். வள்பு - கடிவாள வார். 14. சாம்புவன - வாடுவன. 16. இளையர் - ஏவல் இளையருமாம்.

உள்ளுறை: நிறைசூல் யாமை மறைவாக முட்டையிட அதனைக் குஞ்சுபொறிக்கும் வரை பேணிக்காக்கும் கணவன் ஆமைபோல, நம்முடைய களவு ஒழுக்கம் மறைவாகவே நிகழ்வதாயினும், அது மணமாக உருப்பெரும்வரை உதவிப் பேண வேண்டியவன் காதலனே என்றாள். அப்படிப்பட்டவன் ஆனதால் அவன் வரைந்து வந்தனன் என்பது குறிப்பு. ‘என் நெஞ்சம் நடுங்கியது உகக்கும் அவ்வாறோ?’ என்றது நகையாடிச் சொன்னதாகும்.

தேராழியினால் முகங் குறைக்கப்பெற்ற நெய்தல் முகையானது சாம்புவனவாய், அலையெழுதோறும் அதனோடு நிவந்தாற்போல, வரைவு கருதிய நம் தலைவரது வரவால் அவல்வாய் அடங்கிய அம்பற் பெண்டிர், செருக்கடங்கிய முகத்தினராய், நம் சுற்றத்தார் களிக்குந்தோறும் தாமும் உடன் களியாநிற்பர் என்றும் உள்ளுறை கொள்க.

161. கேட்டே வருந்தினள்!

பாடியவர்: மதுரைப் புல்லங் கண்ணனார். திணை: பாலை. துறை: பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு முன்னமே உணர்ந்தாள் நம் பெருமாட்டி என்று தலைமகனைச் செலவு விலக்கியது.