பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 93


வீரத்தொடியும் அணிந்த அதிகன் என்பவன். அவனது, காய்த்தல் அற்றுப்போதலை அறியாத பயன்நிரம்பிய பலா மரத்தினோடு வேங்கைமரமும் சேர்ந்திருக்கும் மலையிடம் எல்லாம் அழகுறுமாறு, வில்லாற்றல் நிரம்பிய தானையினையுடைய பசும்பூண் பாண்டியனது களிறானது, அழகிய வெற்றிக் கொடியை எடுத்துச் செல்வதைப்போலக், காட்சிக்கு இனிதாக விளங்குவனவாக இழிதருகின்ற, உயர்ந்து காணப்பெறும் அருவிகளையுடைய, நேர்மைகொண்ட நெடிய மேற்கு மலைச் சாரலிலேயுள்ள, அச்சந்தரும் தெய்வமகளிர்களைப் போலப், பெறுதற்கு அரியவள் நம் தலைவி. அவள் -

கருமணல்போல் ஒளியுடன் விளங்கும் கூந்தலினையும், ஒளிபொருந்திய முகத்திலே நீலமலர் என்னும்படியாகச் சுழலும் அழகிய இமைகளையுடைய குளிர்ச்சி பொருந்திய கண்களையும், வண்டினம் விரும்பும் முல்லையரும்புகளை நிரையாக வைத்தாற்போன்ற வெண்மையான பற்களையும், புன்னகையாலே மாண்புற்று இலங்கும் நலம்கெழுமிய பவளம் போன்ற வாயினையும் உடையவளாக, கோல்தொழில் அமைந்த சிறந்த வளையல்கள் விளக்கமுறும்படியாகக் கைகளை வீசிக்கொண்டே, காற்று உறுகின்ற தளிரினைப் போல நடுங்கிநடுங்கி வந்து, நமது காமநோயானது தீர்ந்து நம் வருத்தம் எல்லாம் நீங்குமாறு, அமையாது நம்மை முயங்கினள்! என்று இரவுக்குறிகள் தலைமகளைக் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க்.

சொற்பொருள்: 1. கோடு - கொம்பு: குட்டம் - குட்டம் என்னும் நாடு. கோடு - சங்கம் எனவும், குட்டம் குளம் எனவும் கொள்பவரும் உள்ளனர். 2. குவையிருந் தோன்றல - திரண்ட கருமையோடு தோன்றுவதாகிய, 4. வசிபு நுடங்க - பிளந்துகொண்டு வளைவாக வானிலே தோன்ற, 5. கதழ் உறை - மிக்க நீர்த்துளிகள். 6. விளிவிடன் - முடிவிடம். 7. இகழ்பதம் - நெகிழ்ந்திருக்கும் பக்குவமான சமயம், 8. பனி-குளிர் அலைப்பதுன்புறுத்த 10. அறல் அறல்பட்ட மணல்.

பாடபேதங்கள்: 5. நசைஇய வாழ்கட் செஞ்செவி, இறப்ப எண்ணினர். 18. அதியன்.

163. வாடை விடு தூது!

பாடியவர்: கழார்க் கீரன் எயிற்றியார். திணை: பாலை. துறை: பிரிவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகன் ஆற்றாமை மீதுரச் சொல்லியது.