பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அகநானூறு - மணிமிடை பவளம்


(தலைவனைப் பிரிந்து தலைவி வருந்தியிருந்த காலத்திலே, கார்காலமும் வந்துவிட, அவன் வரக்குறித்த காலம் கடந்து போனதால், அவள் பெரிதும் வாடி மெலிவடைந்தாள். அவளுடைய பெருவருத்தத்தைத் தணிவிக்கும் வகையால் தோழி ஏதேதோ கூறி ஆற்றுவிக்க முயல, அவள், தன் ஆற்றாமை புலப்பட இப்படிக் கூறுகிறாள்.)

        விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
        தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
        எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
        சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
        பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி 5

        விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
        களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
        முளரி கரியும் முன்பனிப் பானாள்,
        குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
        எனக்கே வந்தனை போறி! புனற்கால் 1O

        அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
        கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
        இனையை ஆகிச் செல்மதி;
        வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே!

வானமே அதிரும்படியான இடிமுழக்குடன் கூடியதாகப் பல்வேறு மலர்களும் குழைந்து போகுமாறு, குளிர்ந்த மழையானது பொழிந்தபின், பெயர் விளங்கும் கூதிர்க்காலத்தின கடைநாள் இது. யாம் இங்கே, எமக்கு யாமே கதியாகத் தனித்துக் கிடந்து வருத்தம் கொள்ளுகின்ற உள்ளத்தினர் ஆகுமாறு, நம்மைப் பிரிந்து சென்றார் நம் காதலர்.

அவரை நினைத்து, நம் கையில் விளங்கிய சிலவாகிய வளைகளும் நெகிழ்ந்துவிழப், பெரிதும் அவருடைய வரவினை விரும்புகின்ற உள்ளத்தோடு, அவர் வரும் திக்கினை நோக்கியவாறே, இறத்தற்கு ஏதுவாகிய துயரோடு நாம் வாடி நிற்கின்றோம். இத்தகையவள் இரக்கங்கொள்ளுதற்கு உரியவள்” என்று கருதாது, களிறானது நிரை முகந்து சொரிவதுபோல, இடமெங்கும் மறையுமாறு வீசும் பனித்துளியினால், தாமரை மலரும் கரிந்துபோகும்; இப்படிப்பட்ட முன்பனிக்காலத்துப் பாதி இரவிலே, குன்றுகளையும் நெகிழ்விப்பது போன்ற கடுங்குளிரினைக் கொண்ட வாடைக் காற்றே! நீ என் ஒருத்தியையே சூழ்ந்து வருத்தும் குறிக்கோளோடு வந்தனை போலும்!