பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அகநானூறு - மணிமிடை பவளம்


        கானலும் கழறாது. கழியும் கூறாது:
        தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது:
        ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே,
        இருங்கழி மலந்த கண்போல் நெய்தல்
        கமழ்இதழ் நாற்றம்அமிழ்துஎன நசைஇத்; 5

        தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
        பறைஇய தளரும் துறைவனை, நீயே,
        சொல்லல் வேண்டுமால்-அலவ! பல்கால்
        கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
        கடற்சிறு காக்கை காமர் பெடையொடு 10

        கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
        வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
        நின்னுறு விழுமம் களைந்தோள்
        ‘தன்னுறு விழுமம் நீந்துமோ! எனவே!

கரிய கழிக்கானலிலே கண்களைப் போன்றவான நெய்தற் பூக்கள் மலர்ந்திருக்கும். மணங்கமழும் அவற்றின் இதழ் நாற்றத்தினைத் தமக்கு அமிழ்தமாகக் கருதி, வண்டினங்கள் விருப்பமுடன் அவற்றை நாடிச் செல்லும். அப்படி அவைசென்று, அப்பூவினுள்ளே இருக்கும் தண்மையான பூந்தா தினை உண்டு, அதனால் ஏற்பட்ட களிவெறி அதிகமாகிவிடப், பறத்தற்கும்இயலாது, அவ்விடத்தேயே தளர்ந்து கிடக்கும். அத்தகைய துறைக்கு உரியவன் அவன்! அவனிடத்தே என் வருத்தத்தைச் சென்று -

கானற் சோலையும் கூறாது; உப்பங்கழியும் சொல்லாது; வண்டினம் மொய்க்கின்ற நறுமலர்களையுடைய புன்னையும் புகலாது; அனால், ஒப்பற்ற நின்னையே அல்லாமல் வேறு ஒரு துணை எதுவும் இல்லாதவளாயுள்ளேன். ஆகவே

“சிறிய உருவினவான கடற்காக்கைகள், தாழைமரத்தின் தாழ்ந்த கிளைகளிலே, விருப்பமிக்க தம்முடைய பெடைக ளோடும். இரவின் குளிராலான வருத்தத்துடன் தங்கியிருந்த வாறு, சுறாமீன்கள் இயங்குதலையுடைய, மீன் வேட்டையாடுதல் இல்லாத பரந்த இடத்தேயுள்ள, வெண்மையான இறால் மீனைப்பற்றி உண்பதாகக் கணவு கண்டுகொண்டிருக்கும். அத்தகைய, நள் என்னும் ஒலியினையுடைய இருள்செறிந்த நள்ளிரவு வேளையிலே வந்து, பலகாலும் நினக்குற்ற காம நோயாகிய துயரினைக் களைந்தவள் நின் காதலி. அவள், இப்போது, நின் பிரிவினால் தானுற்ற துயரத்தினையும் நீந்திக் கடப்பாளோ?”