பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 113


செருகிவைத்துக், கள்ளுண்டு ஊன்புழுக்கயர்ந்து மகிழ்வான். அதுபோலத் தலைவனும் களவுக்கூட்டத்தை விட்டு, வரைந்து மணந்து கொண்டு, உறவு முறையாருடன் மணவிருந்து அயர்ந்து இன்புறல் வேண்டும் என்பதாம்.

பாடபேதங்கள்: 8. அணிநுதல் யானை - நெற்றிப்பட்டம் அணிந்த நுதலினையுடைய போர் யானை; அழகிய நுதலினையுடைய யானையுமாம். 10. புதற்போர் குரம்பை. 11, முழவு முதற்பலவு. 18. பசலை யாயின்று.

173. வளை திருத்தினர்!

பாடியவர்: முள்ளியூர்ப் பூதியார் திணை: பாலை, துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: நன்னனுடைய மலைவளம்.

(தலைவன் பொருள் வேட்கையினனாகத் தன் தலைவியைப் பிரிந்து சென்றான். அப்படிச் செல்லும்பொழுது, அவளுடைய வளையல்களைத் திருத்தி, தேற்றிச் சென்ற நிகழ்ச்சியை எடுத்துக் கூறிப், பிரிவினால் வாடியிருக்கும் தலைவியைத் தேற்ற முயலுகிறாள் தோழி)

'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறுநுதல்
மைஈர் ஓதி! அரும்படர் உழத்தல் 5

சிலநாள் தாங்கல் வேண்டும்' என்று, நின்
நல்மாண் எல்வளை திருத்தினர் ஆயின்,
வருவர்- வாழி, தோழி!- பலபுரி
வார்கயிற்று ஒழுகை நோன்சுவற் கொளீ இ,
பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ, 10

உழைமான் அன்பிணை இனன் இரிந்து ஓடக்,
காடுகவின் அழிய உறை இக், கோடை
நின்றுதின விளிந்த அம்புணை, நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல, பழங்குழித் தாஅம் 15

இன்களி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலைஇறந் தோரே.