பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 117



ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் என்னுந் துறைக்குத், ‘தனக்கு ஆக்கம் சிறந்த நட்புடையோராகி உற்றுழி உதவச் சேரற்கண்ணும் என்று பொருள் கூறி இச்செய்யுளை அதற்கு உதாரணமாக, ‘ஒன்றாத் தமரினும், என்னுஞ் சூத்திர உரையினும், நச்சினார்க்கினியர் காட்டினர்.

பாடபேதங்கள்: 8, கையற்று இரங்கி, 1, ஊழுறு கிளர்வீ.

175. வருவோம் என்றனரே!

பாடியவர்: ஆலம்பேரிச் சாத்தனார். திணை: பாலை. துறை: பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகன் சொல்லியது பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதுஉ மாம். சிறப்பு: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வெற்றிப் பெருமிதம்

(கார் காலம் வந்தது. ஆனால், 'அந்தக் கார் காலம் தொடங்கியதும் வந்துவிடுவேன்’ என்று சொல்லிப் பிரிந்து சென்ற அவன் மட்டும் வரவில்லை. அதனை நினைந்து நினைந்து உள்ளம் குமுறினாள் தலைவி. அந்தக் குமுறலைத் தோழியிடம் சொல்லிப் புலம்புகிறாள். அல்லது, அவளுடைய வருத்தத்தை ஆறுதல் கூறித் தேற்ற முயன்ற தோழிக்கு, அவள் கூறியதுமாம்)

        வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன்சிலை
        வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
        விடுதொறும் விளிக்கும் செவ்வாய் வாளி
        ஆறுசெல் வம்பலர் உயிர்செலப் பெயர்ப்பின்,
        பாறுகிளை பயிர்ந்து படுமுடை கவரும் 5

        வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுஉணர
        அரிய வஞ்சினம் சொல்லியும் பல்மாண்
        தெரிவளை முன்கை பற்றியும், ‘வினைமுடித்து
        வருதும் என்றனர் அன்றே-தோழி!
        கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன் 10

        ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த
        வேலினும் பல்ஊழ் மின்னி, முரசு என
        மாஇரு விசும்பிற் கடிஇடி பயிற்றி,
        நேர்கதிர் நிறைத்த நேமியம் செல்வன்
        போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல் 15
 
        திருவில் தேஎத்துக் இலைஇ, உருகெழு
        மண்பயம் பூப்பப் பாஅய்த்,
        தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே!